ரமேஷ் ராஜாவின் பார்வையில் தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை

நூல் : தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை

ஆசிரியர் : சுமித்ரா சத்தியமூர்த்தி

வகை : கவிதைத் தொகுப்பு

பக்கங்கள் : 93

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

ஆசிரியரைப் பற்றி:
================

பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் இந்து நாளிதழின் அன்பாசிரியர் விருதை 2022ம் ஆண்டில் பெற்றார்.2023ல் ஒளிரும் ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார்.

இது இவருடைய மூன்றாவது நூல்.

வாசிப்பனுபவம் :
==============

'தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை' தலைப்பே சொல்லிவிடுவது போல,காதலை நமக்கு கடத்துகிற கவிதைகளைக் கொண்டது இப்புத்தகம்.

ஆனால்,காதல் குறித்தான தவிப்பை மட்டுமா? எனக் கேட்டால்,இல்லை.அதோடு சில இடங்களில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்த கவிதைகளும் மலர்ந்திருக்கின்றன.

இனி வாசித்ததில் சில கவிதைகளை பகிர்ந்து கொள்கிறேன்.அவை எனக்குள் ஏற்படுத்திய எண்ண அலைகள் உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது அலையின் வேகம் அதிகமாக இருக்கலாம்.


வண்ணமின்றி வனத்தில் விரிந்த
சிறு மலர்களுக்கெல்லாம்
சிறகுதறி சிறிது பெரிதாய்
வண்ணம் தூவியவள்

நினைவுகளைத் தின்று செரித்த
நீண்ட பெருவெளியில்
வண்ணமிழ்ந்த வண்ணத்துப்பூச்சியாய்
மீந்திருக்கிறாள்!

   அழுது முடித்த
   அடுத்த கணத்திலெல்லாம்
   ஆடுக்குட்டியினிடமே
    சரணடைகிறேன்
    எனக்கென நல்மேய்ப்பர்
    ஆட்டுக்குட்டி தாண்டி
     அடுத்தொன்றுமில்லை.


உதிர்ந்து சருகாகி
துளிர்விடும் சிறு செடிக்கு
உணவாகிப் போன இலையொன்று
வெட்டுண்டு உயிர் நீத்த
விருட்சத்தின் உறவிழையொன்றை
வேருக்குள் கோர்க்கிறது!


சாணிக் கரைசலோடுதான்
நாளை தொடங்கினாள்
சாவித்திரிபாய் புலே

வள்ளியம்மையை மட்டும்
வெள்ளித்தட்டு வைத்தா
அழைத்திருக்கும் வீதி

உடன்கட்டைக்கு ஒன்றாமல்
ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்தவள்தானே
மங்கம்மாள்

முத்துலெட்சுமியின்
முன்னமர்ந்து கேட்டால்
மூச்சு முட்டச்சொல்வாள்
முட்டிக்கொண்ட கதைகளை

நீர் கொடுக்கும் சான்றிதழை
நீரே வைத்துக் கொள்ளும்
காலைக்கடன் முடித்து
துடைத்துக் கொள்ளலாம்
தண்ணீர் மிச்சம்!!

==============

Comments