மனிதர்கள்: சோமு அய்யா

 


ஓர் நல்ல ஆசிரியர் என்ன திறன்களோடு இருக்க வேண்டும்? 


எளிமையாக சொல்வதென்றால் சோமு அண்ணா போல...


எனது தலைமை ஆசிரியர்களில் ஒருவரனான திருமிகு வைஜெயந்தி மாலா அவர்களின் புதல்வர் ஜோதிவேல், அண்ணன் சோமு அவர்களின்  மாணவர்களில் ஒருவர். 


ஒரு உரையாடலின் பொழுது சார் அய்யா பணி ஓய்வு பெற்ற பொழுது நான் பெங்களூரில் இருந்ததால் வர முடியவில்லை, ஆனால் என் நண்பர்கள் அனைவரிடமும் போன் செய்து சொன்னன், அய்யா ரிட்டையர் ஆகிறார், எல்லோரும் போய்  அட்டென்ட் செய்யுங்கன்னு. 


எனக்கும் இது மகிழ்வு...


எந்த ஒரு மாணவரைக் கேட்டாலும் சோமு சார் குறித்து பாசம் பொங்க, பெருமை பொங்க பேசுவது புதுகையின் இயல்புகளில் ஒன்றாக இருக்கிறது. 


மருத்துவர் அருணகிரி, மருத்துவ சேவையில் துவங்கி மக்கள் சேவைக்கு நகர்ந்திருக்கும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு முத்துராஜா என பெரும் ஆளுமைகள் முதல் அண்ணனின் மாணவர்கள் பல்வேறு பொறுப்பு மிக்க பணிகளில் இருக்கிறார்கள். 

எனக்கு பிடித்த விஷயம் அண்ணனின் தொடர் வாசிப்பு, மாதத்தின் முதல் செலவை நூற்கள் வாங்குவதில்தான் தொடங்குவார். 


இப்படி இவர் வாசிக்க, இவரது புதல்வர் தொடர் வாசிப்பை செய்து மிக நல்ல மதிப்பெண்களை பெற்றும், பொறியியல் பட்டம் பெற்றும், பன்னாட்டு நிறுவங்களின் பணிக்கு செல்லாமல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். 


இதுகுறித்து அண்ணனுக்கு வருத்தம் ஏதுமில்லை. ஒரே மகன் பலகோடிரூபாய்களை  ஈட்டி தன் காலடியில் கொணர்ந்து குவிக்க வேண்டும் என்கிற ஆசைகள்  எல்லாம் அண்ணனுக்கும் இல்லை, அண்ணிக்கும் இல்லை. 

வடகிழக்கு அடர்காடுகளின் மக்களுக்கு உழைக்க துவங்கி, தற்போது டான் பௌண்டேஷன் பணிகளில் ஏரிகளை தூர்வாரும் பணியில் இருக்கிறார் என்று நினைக்கிறன். 

இப்படி அப்பாவையும், மகனையும், இந்த இருவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதோடு இருக்கும் அண்ணிகூட ஓக்கே, ஆனால் வந்திருக்கும் மருமகளும் அப்படியே.

ஒரு ஆண் தான் விரும்பியதை செய்ய, அதுவும் சேவை பணிகளில் ஈடுபட பெரிய புரிதல் உள்ள இணையர் வேண்டும். அது அண்ணனுக்கும் அமைத்திருக்கிறது, பையனுக்கும் அப்படியே. 


ஒரு ஆசிரியராக இவர் செய்ய பணிகளை எழுத துவங்கினால் பதிவுகள் நீளும், நான் என்றும் மறக்காத ஒன்று 

நகரின் பிரதான வீதியில் முன்னாள் மாணவர் ஒருவர் சோமு அண்ணனை நிறுத்தி நலம் விசாரிக்க, இவர் நீ என்னப்பா செய்யற என்கிறார். 

சார் நான் டி.சி.எஸ்சில்  வேலைபார்க்கிறேன் மாதம் ரூபாய் ஒன்றை லட்சம் ஊதியம். 


மிக்க மகிழ்ச்சி நல்லாருப்பா என்று சொல்லி விடைபெற முயன்ற அண்ணனிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்...

சார், நீங்க வகுப்புல கவிதைகளை எழுதி ஒட்டுவீங்களே இன்னும் செய்றீங்களா?

இல்லைப்பா ஏன் கேட்கிறே...


இல்லை நீங்க ஒட்டிய ஒரு கவிதைதான் என்னை படிக்க தூண்டுச்சு, இன்னைக்கு நான் இந்த நிலைக்குவர அந்த கவிதைதான் காரணம் என்கிறான்..

அப்படி என்ன கவிதைப்பா 


ஒட்டிய வயிறோடு 

புல்கட்டு வண்டியை 

இழுத்து மாடு 


கவிதையை சொல்லிவிட்டு, சார் எங்க அம்மா பாத்திரம் தேச்சுதான் என்னை படிக்க வைத்தார்கள், அந்த மாடும் எங்க அம்மாவும் ஒண்ணா தெரிச்சுச்சு..அன்னைக்கு படிக்க ஆரம்பிச்சேன். 

ரொம்ப நன்றி சார், கவிதைகள் தொடர்ந்து ஒட்டுங்க சார் என்று சொல்லி விடைபெற்றிருக்கிறான். 

தட்டச்சும் பொழுதே என் விழிகளில் நீர் சுரக்கிறது. 

ஒரு அறிவியல் ஆசிரியருக்கு கவிதைகள் தேவையா என்கிற கேள்விக்கு இந்த அனுபவம் பதில் தரும்.

இதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல பாடகராக, தேர்ந்த கதைசொல்லியாக, நல்ல தகப்பனாக, சுருங்க சொல்ல வேண்டும் என்றால் மிகச்சிறந்த மனிதராக இருக்கும் சோமு அண்ணா எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி. 


தொடர்வோம் 

அன்பன் 

மது 

(கஸ்தூரி ரெங்கன்)


Comments

  1. நல்லதொரு மனிதர் குறித்த பதிவு. சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

    ReplyDelete

Post a Comment

வருக வருக