வெரோனா நகரம் குட்டி ரோம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய இத்தாலியின் மிகுந்த அழகான நகரங்களில் ஒன்று. இந்தப் பகுதிக்கு தலைநகரம் கூட. யுனெஸ்கோவால் உலக பண்பாட்டு தளம் என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்டா சொல்லணும்னா நாங்க ரசிச்சு ரிலாக்ஸ் பண்றதுக்கு சரியான இடம்.
அப்படி ஒரு தடவை போய்க்கிட்டு இருக்கப்ப.
ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில், வெரோணா நகரத்திற்கு வெளியே, இரண்டு குட்டி பையன்கள் எங்கள் காரை நிறுத்தினார்கள்.
அவர்கள் காட்டு ஸ்ட்ராபெரி பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
வாங்கிடாதீங்க என்றார் எங்கள் எச்சரிக்கையான ஓட்டுநர் லூ ஜி. இதைவிட தரமான பழங்கள் வெரோனாவில் கிடைக்கும். அதோட இந்த பயலுகளை பாருங்களேன் என்று தோள்களைகுலுக்கி, சிறுவர்களின் பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தைப் பார்த்து அருவருப்புடன் முகம் சுழித்தார்.
அவர்களில் ஒருவன் நைந்து போன ஜெர்சி ஒன்றை அணிந்திருந்தான். கால் சட்டையாக காக்கி பேண்ட் ஒன்றைப் பாதியாகக் கிழித்து அதை அணிந்திருந்தான். எலும்பும் தோலுமாக இருந்த இன்னொருவனோ ஆர்மியில் வழங்கப்படும் ஒரு பெரிய போர்வையைக
ஆங்காங்கே துளைகள் இட்டு அணிந்து கொண்டிருந்தான். நிறம் மங்கிப் போயிருந்த தோல், சிண்டும் சிடுக்குமாக இருக்கும் முடியும், கருகருன்னு , துரு துரு என்று இருக்கும் ஆர்வமான விழிகள் எங்களை அவர்கள் பால் கவர்ந்து இழுத்தது.
என் கூட்டாளி அவர்களோடு பேசியதே அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்று தெரிய வந்தது. அவர்களில் மூத்தவன் நிக்கோலா 13 வயது, இளையவன் ஜெகபோ கொஞ்சம் துணிச்கலோடு கார் கதவின் கைப்பிடி அளவே உயரம். குட்டி பையன், வயது 12. நாங்கள் அவர்களிடமிருந்ததிலேயே பெரிய கூடை ஒன்றை வாங்கிக் கொண்டு வெரோனாவை நோக்கி புறப்பட்டோம்.
மறுநாள் நாங்கள் எங்கள் ஹோட்டலில் இருந்து வெளியில் வந்த பொழுது பொது சதுக்கத்தில் நீரூற்றின் பக்கத்தில் எங்கள் நண்பர்கள் இருவரும் ஷூ பாலிஷ் பாக்ஸ்களை வைத்துக்கொண்டு வெகு பிசியாக தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரம் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தோம், அவர்களுடைய வியாபாரம் கொஞ்சம் குறைந்த உடன் அவர்களிடம் சென்றோம். நட்பு ததும்பும் முகத்தோடு எங்களை அவர்கள் வரவேற்றார்கள். என்னப்பா நீங்க பழம் பறித்து விற்று வாழ்க்கை நடத்துறீங்கன்னு நினைத்தேன் என்றேன்.
சார் நாங்க நிறைய வேலைகளைப் பாப்போம் சார். முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக்கொண்டு இதைச் சொல்லிவிட்டு எங்களை நம்பிக்கையோடு ஏறெடுத்துப் பார்த்தான்.
இங்கே வர்றவங்களுக்கு நாங்க தான் ஊரு சுத்தி காட்டுவோம், ஜூலியட்டின் கல்லறைமாதிரி பல முக்கியமான இடங்கள காட்டுவோம்.
அப்ப சரி, எங்களுக்கும் ஊரை சுத்தி காட்டு என்றேன் நான்.
நாங்கள் ஒன்றாக ஊரைச் சுற்ற ஆரம்பித்தோம். இந்த அனுபவத்தில் அவர்கள் மீது இருந்த என்னுடைய ஆர்வம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. அவர்களுடைய நடத்தையும் தோற்றமும் புதிராகவே இருந்தது. குழந்தைகளாக இருந்தார்களே ஒழிய அவர்களிடம் செயற்கை தனம் ஏதுமில்லை. ஜாக்ககோபோ ஒரு அணிலை போல் துள்ளிக் கொண்டே வந்தான். நிக்கோலாகவோ நிதானமான புன்னகையோடு எங்களை ஈர்ப்புடன் வைத்திருந்தான். இவ்வளவையும் கடந்து இரண்டு பையன்கள் முகத்திலும் ஒரு தீர்க்கம் இருந்தது அது அவர்கள் வயதுக்கு மீறியது.
தொடர்ந்து அடுத்த வாரத்தில் அவர்களை அடிக்கடி பார்த்தோம், அவர்கள் எங்களுக்கு ரொம்பவே உதவிகரமாக இருந்தார்கள். எங்களுக்கு ஒரு டப்பா அமெரிக்கன் சிகரெட் வேண்டுமா, இசை நாடகத்தின் அரங்கில் ஒரு இருக்கை வேண்டுமா, இல்லை சுவை மிகுந்த ஒரு உணவகத்தின் முகவரி தேவைகள் எல்லாவற்றையும் அவர்கள் பூர்த்தி செய்தார்கள். நிக்கோலோவையும் ஜெகபாவையும் நாங்கள் நம்பலாம் எங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்தார்கள். அவர்களிடம் பிடித்தமான விஷயமே இதுதான். எப்போதும் பணியாற்ற. சேவை செய்ய தயாராகவே இருந்தார்கள்.
கோடையின் கொடுஞ்சூரியன் தகித்துக் கொண்டிருந்த பொழுது அவர்கள் காலணிகளுக்கு பாலிஷ் போட்டார்கள், கூவிக் கூவி பழங்கள் விற்றார்கள். செய்தித்தாள்களை கூவிக் கூவி விற்றார்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஊரை சுற்றி காட்டினார்கள், சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை கூட செய்தார்கள்.
ஒரு இரவில், குளிர் காற்று வீசிக் கொண்டிருந்த, ஆள்அரவமற்ற பொதுச்சதுக்கத்தை நாங்கள் அடைந்த பொழுது, பயல்கள் இருவரும் கல் வேயப்பட்ட அந்த நடைபாதை விளக்கின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மூத்தவன் நிக்கோலா களைப்போடு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான், விற்பனையாகாத செய்தி தாட்களின் கட்டு ஒன்று அவன் காலடியில் கிடந்தது. சின்னவன் ஜகோபா அண்ணனின் தோள்களின் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நேரமோ நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நிக்கோலா இவ்வளவு லேட்டா இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டேன்.
பதுவா நகரத்திலிருந்து வரும் கடைசி பேருந்துக்காக காத்திருக்கிறேன் சார். அந்தப் பேருந்து வந்துட்டா இங்கே கிடைக்கிற எல்லா பேப்பரையும் வித்துறலாம் சார் என்றான் நிக்கோலா .
ஏன்டா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க, ரெண்டு பேரும் இவ்வளவு களைப்பா இருக்கீங்க.
அது ஒன்னும் மேட்டர் இல்ல சார்
மறுநாள் காலை நீரூற்றின் அருகே அமர்ந்திருந்த அவர்களிடம் என்னுடைய காலணிகளை பாலிஷ் செய்தபோது கேட்டேன், ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க, நல்ல சம்பாதிக்கிறீங்க, ஆனா ஏன் உடைகளுக்கு செலவு பண்ண மாட்டேன்றீங்க. சாப்பிட கூட மாட்டேன்றீங்க. நான் பாக்குறப்ப எல்லாம் தீஞ்சு போன பிரட் அதோடு ஆலம்பழம் தான் சாப்பிடுறீங்க. உண்மையைச் சொல்லுங்கடா பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்றீங்க?
நிக்கோலாவின் சூரிய ஒளிபட்டு மங்கிப் போயிருந்த முகம் இருண்டு, வெளிறியது. ஏதும் சொல்லாமல் அவன் தரையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அப்ப நிச்சயமா காசு சேர்த்து அமெரிக்காவுக்கு போகத்தானே நீ திட்டம் போட்டு இருக்க என்றேன் நான்.
என்னை பார்ப்பதை தவிர்த்து விட்டு கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தான்.
எங்களுக்கு அமெரிக்க போகணும்னு ரொம்ப ஆசைதான். ஆனா இங்கே எங்களுக்கு இப்ப வேற திட்டங்கள் இருக்கு என்றான்.
என்ன திட்டங்கள்?
தர்ம சங்கடமாக சிரித்து விட்டு கம்மிய குரலில் அவன் சொன்னான் சும்மா திட்டங்கள் தான் சார்.
சரிடா நாங்க இந்த திங்கட்கிழமை புறப்படுகிறோம். உங்களுக்கு நாங்க ஏதாவது செய்யணும் அப்படின்னா சொல்லுங்க.
வேண்டாம் என்று நிக்கோலா தலையாட்டினான், ஜெகோபா வெடித்தான் சார் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்க 30 கிலோ மீட்டருக்கு அங்குட்டு இருக்கும் பொலேட்டா கிராமத்துக்கு போவோம் சார். எப்பவும் வாடகை சைக்கிளில் தான் போறோம். எங்கள் மீது உங்களுக்கு ரொம்ப அக்கறை இருக்கு அதனால நாளைக்கு என் தல உங்க கார்ல அனுப்பி வைக்க முடியுமா சார்.
நான் ஏற்கனவே லூஜிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கொடுத்து அனுப்பி விட்டேன். எது எப்படியோ நானே உங்கள கூட்டிட்டு போறேன் என்றேன்.
கனா நேரத்திற்கு நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிக்கோலா தன்னுடைய தம்பியை மனம் வெறுத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான். சார் உங்கள தொல்லை பண்ணனும்னு நினைக்கல சார் என்றான்.
இதுல ஒரு பிரச்சனையும் இல்லை என்று நான்.
உதட்டை கடித்துக் கொண்டு கல்லை போன்ற ஒரு குரலில் சொன்னான் அப்படின்னா நாளைக்கு போவோம் சார்.
மறுநாள் மதியம் நாங்கள் மழையின் மீது இருந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்திற்கு காரில் சென்றோம். வெகு எளிய வீடுகளை நோக்கிபோகப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான். ஆனால் ஜாகோபா எங்களை மிகப் பிரமாண்டமான ஒரு சிகப்பு ஓடுகள் வேயப்பட்ட வில்லாவிற்கு அழைத்து சென்றான், அந்த வில்லா நெடிய சுற்றுச்சுவரால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நான் ஒரு கணம் மூச்சு விடுவதை நிறுத்திவிட்டேன், இந்த இடைவெளியில் என்னுடைய இரண்டு பயணிகளும் காரில் தாவி இறங்கி சார் ரொம்ப லேட்டா வரமாட்டோம் அதிகம் பட்சம் ஒரு மணி நேரம் திரும்பிகிறோம். இந்த கிராமத்துல ஒரு நல்ல டீக்கடை இருக்கு சார் நீங்கவேணும்னா அங்க போய் ஒரு கப் டீ சாப்பிட்டு வாங்க நாங்க அதுக்குள்ள வந்துறோம்.
எப்போது இந்த வார்த்தை சொன்னார்களே எப்போது ஓடி மறைந்தார்கள் என்று தெரியவில்லை குடுகுடு என்று அந்த காம்பவுண்ட் சுவருக்குள் ஓடி மறைந்து விட்டார்கள்.
சில நிமிடங்களுக்கு பிறகு நான் அவர்களை தொடர்ந்து சென்றேன். ஒரு பக்கத்தில் கிரில் கேட் ஒன்று இருந்தது. ஒரு தீர்மானத்துடன் நான் அழைப்பு மணியை அடித்தேன்.
அழகான தோற்றமுடைய, ஸ்டீல் ரிம் கண்ணாடி அணிந்த ஒரு பெண்மணி தோன்றினார். எனக்கு திகைப்பாக இருந்தது அந்த பெண் ஒரு பயிற்சி பெற்ற செவிலியின் சீருடையை அணிந்திருந்தார்.
ஓ வாங்க, அவள் முகம் மலர்ந்தது கதவுகளை திறந்த வண்ணம் சொன்னாள் நிக்கோலாவும் ஜொக்கோபாவுமா நான் உங்களை அவர்களிடம் கூட்டிச் செல்கிறேன் என்றாள்.
குளுமையான, கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆஸ்பத்திரி வராண்டாவில் என்னை அழைத்துச் சென்றாள். அந்த வில்லா ஒரு ஹாஸ்பிடலாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சின்ன கியூபிக்களின் கதவின் முன்னர் அந்த செலிலி நின்றாள். அமைதியாக இருங்கள் என்னும் குரல் பட அவளுடைய விரல்களை உதடுகளின் மீது வைத்து என்னை அந்த கியூபிக்கிளின் கண்ணாடி ஜன்னல் வழி பார்க்கச் சொன்னாள். 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் தலையணைகளை அணைக்கு கொடுத்து அமர வைக்கப்பட்டு இருந்தாள். மிக அழகான ஆடைகளை அவள் அணிந்திருந்தாள். மிகுந்த மகிழ்ச்சியோடு அவள் படுக்கைக்கு பக்கத்தில் இருந்து இரண்டு பையன்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவருடைய கண்கள் மெல்லியதாகவும் மென்மையாகவும் இருந்தன. ஒரே பார்வையில் நம்மால் சொல்லிவிட முடியும் அவள் அவர்களின் அக்கா என்பதை . அவளுக்கு அருகே இருந்த மேசையில் இருந்த பூச்சாடியில் ஒரு அழகிய காட்டுப் பூங்கொத்து. மேசை நிறைய புத்தகங்கள். தட்டு நிறைய பழங்கள்.
நீங்க உள்ள போகலையா என்றார் அந்த செவிலி. உங்களைப் பார்க்க லூசியாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
தலையசைத்து மறுத்துவிட்டு, நகர்ந்தேன். இவ்வளவு மகிழ்வான ஒரு குடும்ப சந்திப்பை குறுக்கீடு செய்ய மனம் ஒப்பவில்லை. கீழ்படியை அடைந்தவுடன் நான் அந்த செவிலியயை கெஞ்சி கேட்டேன், உங்களுக்கு இந்த பையங்களை பற்றி தெரிந்ததை எல்லாம் சொல்லுங்களேன்.
அவர்களைப் பற்றி சொல்ல அவளுக்கும் அவ்வளவு ஆர்வம். இந்த பசங்களுக்கு யாருமே இல்ல சார் லூஸியாவைத் தவிர. ஏற்கனவே அம்மாவும் இல்லை. அவங்க அப்பா ஒரு நல்ல பாடகர், சோகம் என்னன்னா போர் ஆரம்பிச்ச அப்பவே அவர் கொல்லப்பட்டு விட்டார். அது போதாதுன்னு அவங்க வீட்ல குண்டு விழுந்து அழிஞ்சு போச்சு. மூணு பேரும் ரோட்டுக்கு வந்துட்டாங்க. ரொம்ப நாகரிகமா வளர்க்கப்பட்ட குழந்தைங்க. லூசியா ஒரு பாடகியாக வருவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். ஆனா அப்ப அவங்க ஒரு வாய் சோத்துக்கு கூட வழியில்லாமல் ரோட்ல இருந்தாங்க. கொடூரமான குளிரில் மாட்டிக் கொண்டு வாடினார்கள்.
பல மாதங்களுக்கு இடிபாடுகளுக்கு நடுவே அவர்களே அவர்கள் கைகளால் கட்டிக்கொண்ட ஒரு குடிசையில் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜெர்மனியர்கள் தான் எங்கள் நகரை ஆட்சி செய்தார்கள். ஜெர்மனிய அடிமைத் தளைக்கு எதிராக எழுந்த ரகசிய எதிர்ப்பு இயக்கத்தில் முதல் ஆட்களாக சேர்ந்தவர்கள் இந்த சின்னப் பையன்கள்தான். போர் முடிந்து அமைதி திரும்பியதற்கு பிறகு தங்கள் அன்பிற்குரிய அக்காவைத் தேடி மீண்டும் வந்தார்கள். அவள் முதுகுத்தண்டில் காசநோய் கண்டு நோயாளியாக இருந்தாள்.
செவிலி சற்று நேரம் மூச்சு வாங்குவதற்காக நிறுத்தினார் . ஆனால், அவர்கள் அக்காவை கைவிட்டு விடவில்லை. அவர்கள் அவளை இங்கு கொண்டு வந்தார்கள். அவளை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள எங்களை இறைஞ்சினார்கள். கடந்த 12 மாதங்களாக அவள் எங்களுடைய சிகிச்சையில் இருக்கிறாள், உடல்நிலையில நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவள் பழையபடி நடக்கவும் பாடவும் முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.
உண்மைதான் இப்போது எல்லாமே விலை உயர்ந்து விட்டன:சாப்பாடு கிடைக்கிறதே கஷ்டம். நாங்க இந்த மருத்துவமனையை நடத்தணும்னா ஏதாவது ஒரு கட்டணம் வசூலிச்சே ஆகணும். ஆனா ஒவ்வொரு வாரமும் லூசியாவின் சகோதரர்கள் மிகச் சரியாக அந்த கட்டணத்தைக் கட்டி விடுகிறார்கள். ரொம்ப எளிமையாக சொன்னாள். அவங்க என்ன பண்றாங்க எப்படி காசு கேக்குறாங்க, எப்படி இந்த காச கட்றாங்கன்னு. எனக்குத் தெரியல. வெரோனா நகர்ல இந்தச் சூழ்நிலையில வேலைன்னு எதுவும் கிடைக்காது என்பது நல்லாத் தெரியும். இந்தப் பசங்க கிடைக்கிற வேலையே நல்ல பாப்பாங்க போல இருக்கு என்றாள்.
ரொம்ப சரியா சொன்னீங்க, இதைவிட அவங்களால நல்ல செய்ய முடியாது.
பசங்க வெளியில் வந்து காரில் ஏறும் வரை நான் காத்திருந்து அவர்களை நகருக்கு கூட்டி வந்தேன். பயண தூரம் முழுவதும் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் அமைதியாகவே வந்தார்கள். எனது பங்காக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இருந்த போதிலும் அவர்களுடைய அர்ப்பணிப்பு என்னை ஏதோ செய்தது.
இந்த சோதனை மிக்க நாட்களில் ,
யுத்தம் அவர்களின் ஆன்மாவை உடைத்து விடவில்லை. சுயநலமற்ற அவர்களின் செயல்பாடு மனித வாழ்க்கைக்கு ஒரு பெரும் கண்ணியத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மனித சமூகத்திற்கு ஒரு பெரும் நம்பிக்கைத் தந்திருக்கிறது.
அடுத்து பதிவில் சந்திப்போம
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக