அம்மாவின்
உள்ளங்கைகளுக்குள்
சங்குரேகை
பார்த்திருக்கிறேன்
யோகம் என்றாள்..
எதற்கெடுத்தாலும்
எதையாவது
இட்டுக்கட்டி முட்டுக்கொடுத்து
பேசுவது குறைத்து
நிறைவு ததும்ப அயர்ந்து
உறங்குகிறாள்
உறவுகளுக்குள்
இடைவெளி அதிகரித்து
வரத்து குறைந்து
சுருக்கங்கள்
அதிகமாகி விட்டது
எல்லா அலைபேசி
அழைப்புகளையும்
ஒரேபோல் பேசி
பாவனைகளை கூட்டி
சந்தோசங்களை
பகிர்ந்து விட்டு
ஓட்டுக்குள் புகுந்து கொண்டாள்
தனியளின்
பண்டிகை நாள்
அணைக்காத தொலைக்காட்சி
மாத்திரையில் உறக்கம்..
இன்றிவளைப் பார்க்க
வந்தேயிருக்கக்கூடாது
என்மேலும்
ஒரு கூடு கவிழ்வது போல்
இருக்கிறது..
சங்குரேகை
என் கைகளில் இல்லை
ஆனாலும் எனக்குள்ளே
ஆழிச்சத்தம் கேட்கத்தான்
செய்கிறது
உறங்கும் முன்னும்
எழும்போதும் உள்ளங்கைகளை
தவறாமல் தினமும்
பார்த்துக்கொள்வதும்
இதனால் தான்..
புதிதாக எதுவும்
வந்து என்னில்
தங்கிவிட வேண்டாம்
Comments
Post a Comment
வருக வருக