விஜயபாஸ்கர் விஜய் தன்னுடைய தனித்துவமான சிந்தனைப் போக்குக்கு முகநூலில் பிரபலமானவர், ஒரு வங்க மொழி படத்தை இந்த பதிவில் அறிமுகம் செய்திருந்தார். இது அவருடைய பார்வை.
""இங்கே பெண் பிறக்கும் போதே பிறரை மகிழ்ச்சிப்படுத்தத்தான் பிறந்திருக்கிறோம் என்று பயிற்சி கொடுக்கின்றனர். அப்படித்தான் பெண்ணை நம்ப வைக்கின்றனர்.""
எல்லாவிதத்திலும் தன்னைப் போலவே இருக்கும் பெண்ணின் உணர்வுகளை ஏன் ஆண் அங்கீகரிப்பதில்லை என்பது முக்கியமான கேள்வியாகும்.
ஒரு ஆண் இப்படி நினைப்பானா எப்போதாவது ?
எனக்கு இனிப்பு பிடிக்கும். என் மனைவிக்கும் பிடிக்கும். என் அம்மாவுக்கும் பிடிக்கும். சகோதரிக்கும் பிடிக்கும், மகளுக்கும் பிடிக்கும்.
எனக்கு வெளியே ஒடிஆட பிடிக்கும். மனைவி, அம்மா, சகோதரி, மகளுக்கும் அப்படியே.
எனக்கு நண்பர்களுடன் வெளியே போய் உணவருந்த பிடிக்கும். மனைவி அம்மா சகோதரி மகளுக்கும் அப்படியே...
எனக்கு எதிர்பாலினத்தாரிடம் பேச பழக பிடிக்கும். மனைவி, அம்மா, சகோதரி, மகளுக்கும் அப்படியே.
என்று ஏன் ஒரு ஆண் நினைப்பதில்லை.
இங்கேதான் நம் சமூகமும் மதங்களும் அவைகள் விதித்த ஒழுக்க நியதிகளும் வருகின்றன.
அவை எல்லாம் சேர்ந்து விசாரணைக்கு இடமே இல்லாத ஒரு “அடக்க பெண் சித்திரத்தை” ஆண் குழந்தைகள் மனதில் , பெண்கள் பற்றி திணித்து வைக்கின்றன.
பெண் சமூகத்தை எதிர்க்க பயப்படுகிறாளா ?
அல்லது தயங்குகிறாளா ? தயங்குகிறாள் என்றால் அந்த தயக்கம் எப்படி ஏற்படுகிறது.
அது அவளுக்குள் திணிக்கப்பட்ட ஒன்றா அல்லது அவள் இயல்பே அதுதானா
போன்ற கேள்விகளை Shwet pathorer thala என்ற வங்காளத்திரைப்படம் அலசுகிறது.
1.திருமணம் முடிந்து ஏழு வருடங்களில் வந்தனாவின் கணவன் இறந்து விடுகிறான். பிற்போக்கு இந்திய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த வந்தனாவை “நீ விதவை” என்று அவமானப்படுத்துகிறது கணவனின் குடும்பம்.
2. என் மகன் இளம் வயதில் இருக்கும் போது நான் விதவை என்று ஒதுங்கிப் போனால் அவன் மனது பாதிக்கப்படும். அதனால் இதையெல்லாம் மாற்றிக்கொள்ளலாமே என்று கெஞ்சுகிறாள் வந்தனா. கணவனின் அம்மா அப்பா இதை மறுக்கிறார்கள். அவளை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.
3. இதைப் பார்த்து பொறுக்க முடியாத வந்தனாவின் தாய்மாமா அவளையும் குழந்தையையும் அவளோடு அழைத்து வருகிறார்.அங்கே மகளையும் பேரனையும் போல இருவர் மேலும் அன்பு செலுத்துகிறார். அவரும் இறந்து விட வந்தனா தன் மகனோடு வளர்ந்த மகனோடு தனியே நிற்கிறாள்.
4.அப்போது கல்லூரி படிக்கும் மகனுக்கு ஒவியம் கற்றுக் கொடுக்கும் ஒவிய ஆசியரின் நட்பு கிடைக்கிறது. அவர் பெயர் சுடிப்தோ சர்கார். சுடிப்தோ மிக கண்ணியமான மத்திம வயதை சேர்ந்த ஒவியர். அவர் வந்தனாவிடம் அவள் முகத்தை வரைய வேண்டும் கண்காட்சிக்கு வைக்க வேண்டும் என்று கேட்கிறார்.
5. வந்தனாவின் மகனும் வற்புறுத்த வந்தனா ஒப்புக் கொள்கிறாள். சுடிப்தோ வந்தனாவின் முகத்தை ஆர்வமுடன் வரைகிறார். பல ஆண்டு காலமாக தன் முக அழகை யாரும் ரசிக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வந்தனாவுக்கு இந்த ஒவியரின் செயல் பிடித்திருக்கிறது. அவர் மேல் மெலிதான அன்பு அரும்புகிறது. சுடிப்தோ வந்தனாவின் முக ஒவியங்களை கண்காட்சியில் வைக்கிறார். பலர் அதை புகழ்ந்து பேசுகிறார்கள்.
6. ஒவியக் கண்காட்சியில் வெளியே இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது அனைவரும் இருக்கும் போது சுடிப்தோ வந்தனாவுக்கு ஒரு சேலை பரிசளிக்கிறார். வந்தனா அதை வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். வெளியே மறுத்தாளே தவிர அவள் உள்ளமெல்லாம் சுடிப்தோவின் அன்பை ரசித்தே இருந்தது.
7. இதனிடையே வந்தனாவின் மகன் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் உணர்வின் ஊடே “ இதே உணர்வுதான் தன் அம்மாவுக்கும் சுடிப்தோவுக்கும் இடையே வந்திருக்கும்” என்ற எண்ணம் கொள்கிறான். அவனால் அம்மாவின் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
8.ஒரு மழை இரவில் சுடிப்தோ வந்தனா வீட்டுக்கு தற்செயலாக வருகிறார். மழையில் நனைந்த காரணத்தால் தன் கணவனின் ஜிப்பாவை சுடிப்தோவுக்கு கொடுக்கிறாள் வந்தனா. இதை வெளியே இருந்து உள்ளே வந்த வந்தானவின் மகன் வெறுக்கிறான். “என் அப்பாவின் உடை உங்களுக்கு பொருந்தவில்லை” என்று எரிந்து விழுகிறான்.
9. மகனின் இந்த அநாகரிக செயலால் வந்தனா துடிதுடித்து போய்விடுகிறாள் “இவ்வளவு அநாகரிகமாக நடக்க எங்கே கற்றாய்” என்று மகனிடம் கெஞ்சும் பாவனையில் அதட்டுகிறாள். அதற்கு மகன் நான் இதை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறான்.
10. சுடிப்தோ தன் காதலை வந்தனாவிடம் தெரிவிக்கிறார். வந்தனாவின் தோழியும் அதை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்கிறாள். ஆனால் வந்தனா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தான் வரைந்த ஒவியத்தை வந்தனாவிடம் கொடுக்கிறார் சுடிப்தோ. அதில் சிகப்பு பொட்டு வைத்து வண்ண சேலையில் வந்தனா அழகாக இருக்கிறாள். அந்நேரம் வீட்டுக்கு தன் காதலி மற்றும் நண்பர்களுடன் வந்த மகன் அந்த ஒவியத்தை வெறுக்கிறான்.
11. வந்தனாவின் படுக்கையில் அந்த ஒவியத்தை மகன் கிழித்து வைத்திருக்கிறாள். கிழிந்த ஒவியத்தைப் பார்த்து வந்தனா கலங்கி அழுகிறார். சுடிப்தோ வந்தனாவின் மகனிடம் தங்கள் காதலை சொல்கிறார். அதற்கு வந்தனாவின் மகன் கத்தி செல்கிறான்.
12. எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆனாலும் நான் உங்களை விரும்புகிறேன். எனக்கு பரிசளித்து நான் மறுத்த சேலையை மட்டும் எனக்கு கொடுக்கிறீர்களா என்று வந்தனா அன்புடன் கேட்கிறாள். மேலும் மேலும் மகன் இவர்கள் காதலை வெறித்தனமாக எதிர்க்கிறான்.
13.குறிப்பிட்ட சமயத்தில் வந்தனா தன் வீட்டை மகனுக்கு எழுதி வைத்து விட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சரணடைகிறாள். அதற்கு முன்பு சுடிப்தோவிடம் சொல்லி செல்கிறாள்.
14. முடிவில் வந்தனாவின் மகன் மனம் திருந்தி அம்மாவை அழைக்கப் போகும் போது அங்கிருந்தும் அவள் போனதாக சொல்லி விடுகிறார்கள். ஆனால் சுடிப்தோ மட்டும் வந்தனாவின் சேலை கீழ்பாகத்தை பார்த்து விடுகிறார். அது அவர் பரிசாக கொடுத்த சேலைதான்.
15. ஆசிரமத்தில் தனியே மரத்தின் பின்னே இருக்கும் வந்தனாவை சுடிப்தோ போய் கேட்கிறார். “ இல்லை நான் இப்படியே இருந்து விடுகிறேன். இது நீங்கள் கொடுத்த சேலை” என்கிறாள். ”எனக்கு தெரியும். நான் உன்னை வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் அந்த சேலையில் உன்னை கண்நிறைவாக பார்க்க விரும்புகிறேன்” என்று சுடிப்தோ பார்க்கிறார். “போதும் உன்னை என் கண்களில் நிறைத்து விட்டேன். நான் வருகிறேன்” என்ற்கிறார். சுடிப்தோ போகும் போது வந்தனா அன்போடு “ உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்கிறாள். படம் நிறைகிறது.
- ஏன் வந்தனாவின் மகன் காதலை எதிர்க்கிறான் என்பதற்கு வந்தான நல்ல காரணம் ஒன்றை சொல்கிறாள் “ இங்கே பெண் பிறக்கும் போதே பிறரை மகிழ்ச்சிப்படுத்தத்தான் பிறந்திருக்கிறோம் என்று பயிற்சி கொடுக்கின்றனர். அப்படித்தான் பெண்ணை நம்ப வைக்கின்றனர். அப்பா, கணவர், அண்ணன், மகன் என்று அனைவரையும் மகிழ்ச்சி படுத்துவது மட்டுமே உன் கடமை என்று அவர்களும் நம்பி எங்களையும் நம்ப வைக்கின்றனர். இதனால் ஏதாவது கட்டத்தில் பெண்கள் அவர்கள் உணர்வு சார்ந்து இயங்க ஆரம்பித்தால், அவர்களுக்கு விருப்பமான வாழ்க்கையை அனுபவித்தால் அது மகனாயினும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்ற அர்த்ததில் பேசுகிறாள்.
- வந்தனாவின் மகன் காதலித்த பிறகுதான் தன் அம்மாவின் மேல் சந்தேகப்பட்டு கோபப்படுகிறான். உண்மையில் அவன் காதல் அவன் மனதில் “ இதே காதல் உணர்வுதானே அம்மாவுக்கும் இருக்கும்” என்ற ரீதியில்தான் போயிருக்க வேண்டும். ஆனால் அவன் மனம் எதிர்திசையில் போய் அவன் காதலியின் மீது காதல் உணர்வு அதிகம் கொள்ள கொள்ள அம்மாவின் காதல் மீது எரிச்சல் அதிகம் கொள்கிறான்.
- சமூகத்தடையை எதிர்த்து போராடுவது பெண்ணுக்கு பெரிய பிரச்சனை இல்லை. அதை எளிதில் அவளால் செய்ய முடிகிறது. எத்தனையோ இந்து பெண்கள் முஸ்லிம் குடும்பத்தில் இருக்கிறார்கள். இந்து பழக்கத்தை பின்பற்றும் முஸ்லிம் பெண்களுக்கும் இருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களால் இது போன்ற மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் நெருகிய உறவினர்களின் தயக்கத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பாவோ, அம்மாவோ, மகனோ தன் முடிவில் கொள்ளும் தயக்கத்தை வேதனையாக பார்க்கிறாள். வந்தனாவால் மகனை எதிர்த்து எளிதில் திருமணம் செய்திருக்க முடியும் ஆனால் அவனிடம் இருக்கும் தயக்கம், தன் அம்மாவின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள இருக்கும் தயக்கம் அவளை சித்தரவதை செய்கிறது. நெருங்கியவர்களின் இந்த தயக்கம் பெண்ணை “நான் செய்வது சரியா தப்பா.. சரியா தப்பா” என்ற குழப்பத்தில் வைக்கிறது. இப்படி குழம்பி சித்தரவதை அனுபவிப்பதை விட தனியே இருக்கலாம் என்று வந்தனா முடிவு செய்கிறாள்.
- படத்தில் நெகிழ்ச்சியான பாடல் வரிகள் ஒன்று மனதை தொட்டது...
வந்தனா சுடிப்தோவை நோக்கும் பாடல் வரிகள்தாம்...
“நீ ஏற்றும் மெழுகுவர்த்தி சீக்கிரம் அணைந்து விடும்.
அதன் பிறகு உன்னை நான் எங்கு தேடுவேன் “
காதலித்த பிறகு தன் அம்மாவின் உணர்வை புரிந்து கொள்வதற்கு பதிலாக அதற்கு எதிராக திரும்பும் ஆண் புத்திதான் இப்படத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆண் குழந்தைகள் மனதில் அம்மாவின் உதாரணம் மூலம் விழும் ”அடக்க பெண் சித்திரத்தை” பெற்றோர்களும் அவர்கள் குடும்பமும் கலைத்து போட வேண்டும்.
ஆண்கள் திரும்ப திரும்ப அவர்கள் மனதை இது பற்றி யோசிக்க செய்ய வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையிலான இந்த வசதிகுறைவான் டாப்பிக்கை துணிந்து யோசிக்க வேண்டும்.
Comments
Post a Comment
வருக வருக