புதுக்கோட்டையில் 11 வது குழந்தைகள் கலை இலக்கிய கொண்டாட்டம் அறிவிப்பு வந்ததும் நமக்குக் கொஞ்சம் பக்கம் சென்று வரலாம் என முடிவு செய்தேன். தினமும் இனியன் அவர்களின் முகநூல் பதிவு வேற ஆவலைத் தூண்டிக் கொண்டே இருந்தது. நிகழ்வுக்குக் கொஞ்சம் தாமதமாகச் சென்றதால் அரங்கம் நிறைந்து இருந்தது. கடைசியில் அமர்ந்தேன்.
குழந்தைகள் கதைசொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறு வெளிப்பாடுகளுடன் கதையைச் சொன்னார்கள். சிலர் கேள்வி கேட்டு உரையாடி, உடல் மொழியில், குரல் ஏற்றத்தாழ்வில் பல உணர்வுகளைக் கடத்தினார்கள். இடையே இடையே கோமாளிகள் கொண்டாட்டம். கோமாளிகள் வரும் போது எல்லாம் குழந்தைகள் உற்சாகம் உச்சம் தொட்டது. கடைசியில் POCSO பற்றிய விழிப்புணர்வைப் பாடல்கள் வழி குழந்தைகள் மனதில் ஆழப் பதிய வைத்தார்கள்.
அறிவியல் மாயாஜால வித்தைகளை அறிவரசன் அவர்கள் குதூகலத்துடன் விளக்கினார். வேதியியல் பெயர்கள், அறிவியல் கூற்றுகளை விளக்கியது எல்லாம் அருமை.
வானவில் பள்ளி மாணவர்கள் "கூடி விளையாடு பாப்பா" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள்.கதை மாந்தர்கள் ஒப்பனை visual treat ஆக இருந்தது. உடல் மொழியில் ஒவ்வொரு விலங்காகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். கடைசியில் அமர்ந்ததால் சரியாகக் கதையை உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை.வீடியோவிற்கு ஆவலாகக் காத்து இருக்கிறேன்.
கதை சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் நினைவுப்பரிசுவுடன் அவர்கள் விரும்பிய ஒன்றைப் பரிசாக வழங்கினார்கள். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் எல்லோருக்கும் பையில் நிறையப் புத்தகங்கள்,விசில்கள், பறக்கும் காற்றாடி, பாராசூட் எனக் கொடுத்து இருந்தார்கள்.குழந்தைகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
நிகழ்வில் சிற்றண்டி வழங்குதல், குழந்தைகள் நினைவுப் பரிசை வைத்துக் கொள்ள பை வழங்குதல், மதிய உணவு மேற்பார்வை,நிகழ்ச்சி தொகுப்பு என எல்லாவற்றிலும் நேர்த்தி.பல்லாங்குழி அமைப்பினர் அனைவரும் இணைந்து சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். வாழ்த்துக்கள்.
இந்த அத்தனை நிகழ்விற்குப் பின்னர் உள்ள இனியன் அவர்களின் களப்பணி , நிகழ்ச்சி ஏற்பாடு, செயல்படுத்திய விதம் என அனைத்திற்கும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அன்பு வாழ்த்துக்கள் இனியன்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகள் வாசிப்பின் சுவையை உணர்ந்து கொண்டு வாசிப்பை வாழ்க்கை முழுவதும் பின்பற்றலாம் என்ற உத்வேகத்தைக் குழந்தைகள் கலை இலக்கிய கொண்டாட்டம் அவர்களுக்குக் கடத்தி இருக்கும்.
கடைசியில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் இனியன் அவர்களுடன் புத்தகத்தில் கையொப்பம், புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றேன்.
இதைப்போலத் தனித்த பயணங்கள் எனக்குப் பல புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது.மேலும் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.மகிழ்ச்சி😊
பிரியா புரட்சிமணி அவர்களின் பதிவு
Comments
Post a Comment
வருக வருக