வலசை

பறவைகள்... பலவிதம்

படத்தில் இருப்பது நான்கைந்து நாட்களுக்கு முன்பு வாசித்த செய்தி இது. அப்போதே பகிர நினைத்தேன், வெளியூர் சென்றதால் மறந்து போனது. இன்று மீண்டும் பேஸ்புக்கில் வந்ததால், பகிர்கிறேன்.

ஆப்பிரிக்காவின் தென்கோடியிலிருந்து வடக்கே பின்லாந்து வரை ஒரு கோடு தெரிகிறது இல்லையா? இது, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம்.

காலில் ஜிபிஎஸ் வளையம் பொருத்தப்பட்ட ஒரு பெண் பருந்து, (Falcon) 42 நாட்களில் இந்தத் தொலைவைக் கடந்து, பின்லாந்துக்கு புலம் பெயர்ந்துள்ளது. அதாவது, சராசரியாக நாளுக்கு 230 கிமீ பறந்திருக்கிறது.

வரைபடத்தைப் பார்க்கும்போது இன்னும் பல விஷயங்கள் புரியும். 
- படத்தின்படி பார்த்தால் புறப்பட்ட இடமும் சேரும் இடமும் நேர் கோட்டில் இருக்கின்றன. ஆனால் இந்தப் பருந்து, குறிப்பிட்ட சில இடங்களில் வளைந்து சென்றிருக்கிறது. 
- அதாவது, சூடானிலும் எகிப்திலும் பாலைவனப் பகுதிகள் என்பதால் அந்தப் பகுதியில் பறக்காமல் வளைகுடா கடற்கரையோரமாகப் பறந்திருக்கிறது. 
- அதேபோல, மத்தியதரைக் கடல்மீதும் பறக்காமல், தெளிவாக சிரியா-துருக்கி மேலாக வளைந்து சென்று கிரீசைத் தொட்டதும் மீண்டும் நேராகப் பயணித்து பின்லாந்தை அடைந்திருக்கிறது.
- அதாவது, கடலுக்கு மேலே பறப்பதைத் தவிர்த்து விட்டு, உணவும் ஓய்வும் கிடைக்கும் நிலப்பகுதியின் மேலாகப் பறந்திருக்கிறது. 

இது பறவைகளின் வலசை குறித்து அறிவியலாருக்கு நிறைய செய்திகளைத் தருகிறது, அல்லது ஏற்கெனவே தெரிந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து சைபீரியாவிலிருந்தும் பல பறவைகள் வேடந்தாங்கல் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வலசை வருவதை நாமெல்லாரும் படித்திருப்போம். பறவைகள் புலம் பெயர்தல் - வலசை போகுதல் - பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம். உணவுக்காக, கடும் குளிரிலிருந்து தப்பிக்க, இனப்பெருக்கம் செய்ய என பல்வேறு காரணங்களால் பல்லாயிரம் மைல்கள் கடந்து பறவைகள் தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. 

சில இனப் பறவைகள் எங்கும் இறங்காமல், இறங்க முடியாமல் கடல்களுக்கு மேலே பல நூறு கிலோமீட்டர் பறப்பதும் உண்டு. இவை உண்ணாமல் உறங்காமல் நாள்கணக்கில் எப்படிப் பறக்கின்றன என்பது பெரிய புதிராக இருந்தது. அறிவியல் துணையால் அந்தப் புதிர்களுக்கு விடைகள் கிடைக்கத் தொடங்கி விட்டது. இப்போதும்கூட எல்லாப் புதிர்களுக்கும் விடை கிடைத்து விடவில்லை என்பதும் உண்மைதான்.

(பறவைகள் தமது அலகில் ஒரு குச்சியை எடுத்துச் செல்லும், கடலுக்கு மேலாகப் பறக்கும்போது அதை கீழே போட்டு அதன்மேல் நின்று கொண்டு ஓய்வெடுத்துக்கொள்ளும் போன்ற கதைகள் வாட்ஸ்அப் வாயர்கள் புண்ணியத்தில் நிறையவே பார்த்திருப்பீர்கள். அதை எல்லாம் தயவுசெய்து ஒதுக்கி விடவும்.)

குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட பறவைகள், குறிப்பிட்ட இடத்தை நோக்கி எவ்வாறு வருகின்றன, எப்படி வழியைக் கண்டடைகின்றன என்பதையெல்லாம் அறியும்போது வியப்பாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்,

பறவைக்கூட்டம் < வடிவத்தில் பறப்பதை நாம் எல்லாருமே பார்த்திருப்போம். அவ்வாறு பறக்கும்போது, முன்செல்லும் பறவையின் இறகுகள் ஒரு சுழலை உருவாக்குகின்றன, அது பின்னே வரும் பறவைகளுக்கு பறக்கும் வேலையை எளிதாக்குகின்றது. அந்த V வடிவத்தில் முன்னிலை வகிக்கும் பறவைகள் அவ்வப்போது ஷிப்ட் முறை போல இடம் மாறிக் கொள்கின்றன. 

காற்றடிக்கும் திசைக்கேற்ப தம் பறத்தலை அமைத்துக் கொள்கின்றன. காற்றின் வெப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அதாவது, வெப்பக் காற்று அடர்த்தி குறைவாக இருக்கும். மேலே உயரும். அடர்த்தி குறைவாக இருக்கும் காற்றின் ஊடாக பறக்கும்போது சிறகடிக்கும் உழைப்பு கொஞ்சம் எளிதாகும். அதனால், அவ்வப்போது பறவைகள் வெப்பக் காற்றை நாடி மேலும் கீழுமாக இடம் மாறியும் பறக்கும். அதேபோல இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும் என்பதால், இரவுகளில் பறப்பதும் அவற்றின் வழக்கமாகும்.

நீண்ட தொலைவு பறக்கும்போது, இறக்கைகளை விரித்துக் கொண்டு மேலிருந்து சறுக்கும் கோணத்தில் இறங்குவதுபோல பறப்பதால், வெகுதூரத்துக்கு சிறகடிக்கத் தேவையில்லாமல், ஆற்றலை சேமித்துக் கொள்கின்றன. 

மனிதருக்கு இல்லாத சில சிறப்பு உணர்வுகள் பறவைகளுக்கு உண்டு. அதைக் கொண்டுதான் கச்சிதமாக குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஆண்டுதோறும் வருகின்றன. சூரியனின் இருப்பிடம், நட்சத்திரங்கள், பூமியின் காந்தப்புலம் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு திசைகளை வகுத்துக் கொள்கின்றன. 

குறிப்பிட்ட சில நில அடையாளங்களையும் கவனத்தில் கொள்கின்றன. இந்த வகையில் பார்க்கும்போது, நாம் ஏற்படுத்தும் ஒளிமாசும், வானுயர் கட்டிடங்களும் பறவைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.

இளம்பறவைகள் தம்மிலும் மூத்த பறவைகளிடமிருந்து திசைகளைக் கற்றுக் கொள்கின்றன என்பது மட்டுமல்ல, சில விஷயங்கள் மரபார்ந்த வழியில் பரம்பரை பரம்பரையாகவும் குஞ்சுகளுக்குக் கடத்தப்படுகின்றன. மரபணு ரீதியான நடத்தையிலும்கூட சில மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக அறிவியலார் கருதுகின்றனர்.

நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலைகளில் நாம் பொருத்தும் பிரகாசமான ஒளிவிளக்குகள் பறவைகளைக் குழப்புகின்றன. பிரம்மாண்டக் கட்டிடங்கள் நில அடையாளங்களை மாற்றிக் குழப்புகின்றன. காற்று மாசுகளால் வானத்தின் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாமல் போவதும் பறவைகளுக்கு பாதகமாகின்றது. ஆப்கானிஸ்தானின் நீண்டகாலப் போர்கள் புலம் பெயர் பறவைகளுக்கு பெரும் பாதகமாக அமைந்தது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

பறவை ஆராய்ச்சி என்பது மிகுந்த செலவும் நேரமும் உழைப்பும் தேவைப்படுவது. ஒரு பறவையின் உடலில் ஜிபிஎஸ் அல்லது ஏதேனும் கருவியைப் பொருத்தி விட்டாலும், மீண்டும் அதே பறவை பிடிபட்டால்தான் அந்தக் கருவியைக் கொண்டு ஆராய முடியும். இவ்வாறு கிடைப்பது அரிதிலும் அரிது. ஆனாலும், சிலர் இதை சாதித்து விடுகிறார்கள். அப்படியொரு வீடியோவை முதல் கமென்ட்டில் பார்க்கலாம்.

90000 - தொண்ணூறாயிரம் கிலோமீட்டர் புலம்பெயரும் பறவைகள் பற்றித் தெரியுமா? அதன் பெயர் Arctic Tern. ஆண்டுதோறும் வடதுருவத்திலிருந்து தென் துருவத்துக்கும், தென் துருவத்திலிருந்து வடதுருவத்துக்கும் பறக்கும். இதன் ஆயுள் சராசரியாக 30 ஆண்டுகள். அப்படியானால், இதன் ஆயுள் காலத்தில் மூன்று முறை நிலவுக்குப் போய்வந்த தூரம் என்று வைத்துக் கொள்ளலாம்! மேலும் அறிய இரண்டாவது கமென்ட் பார்க்கவும்.


ஆக்கம்
ஆர் ஷாஜகான்

முகநூல் பகிர்வு

Comments