படைப்பாளனின் டைரி குறிப்பு


பாதையைப் பார்த்தல் 

*** 

தென்றல் வந்து என்னைத் தொடும் ப்ராஜெக்ட் என்னிடம் வந்த போது கொஞ்சம் டெலிகேட் மொமெண்ட்டாக இருந்தது.. 

ஏனென்றால் அதன் சப்ஜெக்ட் அப்படி.. வங்காள சீரியலின் தமிழ் ரீமேக்.. வங்காளத்தில் ஒரு ரவுடி ஒரு பொண்ணுக்கு கோவிலில் பொட்டு வைத்துவிடுவான். நீ எனக்கு பொட்டு வைத்துவிட்டாய். இனிமேல் நீதான் என் புருசன் என்று அவன் வீட்டில் சென்று உட்கார்ந்து விடுவாள். அவன் மனைவியாக சேருவதற்கு அவள் என்ன பாடு படுகிறாள் என்பதுதான் கதை.. வங்கத்தில் அது பெரிய ஹிட்..

ஆனால் தமிழகத்தில்.? 

பொட்டு வைத்தால் பொண்டாட்டி என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கடுமையான விவாதங்கள் நடந்தன.. இதற்கிடையில் சேனலில் இருந்து முடிவு செய்தார்கள். பொட்டு வைக்க வேண்டாம். தாலி கட்டி விட்டான் என்று வைத்துக் கொள்ளலாம் என்று..

முதல் ப்ரொமோ வெளிவந்தது.. தமிழ் இணைய வெளியே கொந்தளித்து கழுவி ஊற்றியது.. ப்ரமோ வந்த யுடியூப் பக்கத்தில் அவ்வளவு தூஷணைகள். ஃபேஸ்புக்  ட்விட்டர் உள்ளிட்ட ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள். தமிழ் சீரியல்களை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் பிற்போக்கு சீரியல் என்று கடுமையான வசைகள். ஒரு காவல்துறை அதிகாரியே இது போன்ற செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று அறிக்கை விடுமளவுக்கு ப்ரமோவுக்கு எதிர்ப்பு..

இந்த நிலையில்தான் நான் கமிட் ஆகிறேன்.
அப்போது முதலில் என் நண்பன் ஜோதிதான் திரைக்கதை எழுதினான்.. அவன் எழுதியதை வைத்து இருபத்தைந்து காட்சிகள் ஷூட் கூட செய்தார்கள். பின் கான்செப்ட் மாறியபோது ஜோதி என்னால் முடியாது என்று வெளியேறி விட்டான்.

அப்போதுதான் வெற்றி உள்ளே வருகிறார். அப்போது எனக்கு வெற்றியைத் தெரியாதுு. இயக்குனர் யாரென்றே தெரியாது. கேமராமேன் சரவணனை சுத்தமாக தெரியாது.

ஆனால் அப்போது எங்களுக்குத் தெரியாது.. ஒரு வாழ்நாள் பந்தம் உருவாகப் போகிறது என்று..
திரைக்கதையாசிரியர் வெற்றி உள்ளே வந்ததும திரைக்கதை ஒரு புது வடிவம் பெற்றது. வெற்றியைப் பொறுத்த வரைக்கும் எதுவாக இருந்தாலும் அதை lighter vein ல் கொண்டு செல்வதில் வித்தகர்.. அதே நேரம் ஒரு வசனகர்த்தாவாக அந்த கேரக்டர்களை நான் ஷேப் செய்யும்போது நன்றாக இருந்தால் உற்சாகப் படுத்துவார்.

இப்படியாகத்தான் தென்றலில் என் பயணம் தொடங்கியது.

மெல்ல மெல்ல தொடரின் பாத்திரங்கள் என் வசனத்தில் தனித்தன்மை பெறத் துவங்கின.. எடுத்த எடுப்பில் கோவிலில் வைத்து தாலி கட்டும் காட்சி.  அந்த டென்ஷன் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.
 
சரி. இரண்டு நாட்கள் கழித்துதான் எடுக்கப் போகிறார்கள் என்று நினைத்து நான் தமிழும் சரஸ்வதியும்மில் கான்சென்ட்ரேட் செய்தபடி இருநதேன். திடீரென்று கோவில் சீன் நாளைக்கு ஷூட் போறோம். என்று சொல்லிவிட்டார்கள். அந்த திருமணம்தான் இந்த தொடருக்கே அடிப்படை. அதை பக்காவாக செய்தாக வேண்டும். ஆனால் முந்தைய நாள் மாலைதான் ஷூட்டிங் என்று சொல்கிறார்கள். நான் தமிழும் சரஸ்வதிக்கும் வேறு எழுத வேண்டி இருக்கிறது. 

அவசர அவசரமாக எழுதத் துவங்குகிறேன். ஆனால் காலைக்குள் எழுதி முடிக்க முடியவில்லை.. 

சார் ஏழு மணி கால்ஷீட்.. எல்லாரும் ஸ்பாட்டுக்கு போயிட்டு இருக்கோம்.. இன்னும் சீன் பேப்பர் வரலை என்று டென்ஷன் ஏற்றுகிறார்கள்.

இந்த மாதிரி இடங்கள்தான் என்னைப் போன்றோர் உடனடியாக முடிவு செய்ய வேண்டிய இடங்கள். நான் உடனடியாக காட்சியை மனதுக்குள் நான்கு பிளாக்குகளாக பிரித்துக் கொள்கிறேன்.  அது ஒரு மலைக் கோயில். காட்சி அடிவாரத்தில் இருந்து துவங்கி அடிவாரத்தில் முடியும்..

ஆக முதலில் அடிவாரப் பகுதிகளை எழுதி விடுவோம் என்று காட்சி துவங்கும் அடிவாரப் பகுதிகளை முதலில் எழுதி அனுப்புகிறேன். பின்னர் அவசரமாக காட்சி முடியும் அடிவாரப் பகுதியை எழுதி அனுப்புகிறேன்..
பேரலலாக நான் முதலில் எழுதி அனுப்பிய காட்சி ஷூட் செய்யப்பட்டுக் கொண்டிருககிறது. இரண்டாவது அனுப்பிய இறுதிப் பகுதியும் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம்தான் நடுவில் மலை மீது கோவிலில் நடக்கும் பகுதியை நான் அவசரமாக எழுதத் துவங்குகிறேன். அன்றைய நாளின் டென்ஷன் இன்று வரைக்கும் எனக்கு தெளிவாக நினைவில் இருககிறது.

அவசரமாக எழுதுகிறேன். ஆனாலும் காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து எழுத்தில் ஒரு நிதானத்தைக் கடை பிடிக்கிறேன். ஒரு வழியாக எழுதி அனுப்பி வைக்கிறேன். 

மொத்தம் 48 பக்க காட்சி என நினைக்கிறேன்.. ஒரே ஒரு காட்சிதான். முதலில் ஆரம்பத்தை எழுதுகிறேன். அடுத்து இறுதியை எழுதுகிறேன்.. அதன் பின்தான் நடுவில் உள்ள ஆக்ஷன் பகுதியை எழுதுகிறேன்.. எதாவது பிசிறு தட்டிவிடக் கூடாது என்ற கவனம் வேறு.. மிக மிக சிறப்பாக அந்த காட்சியை எழுதி முடித்தேன். உண்மையில் முதன் முதலாக தென்றலை ஹைப் செய்த காட்சி என்றால் அந்த காட்சிதான். 

இங்கே இயக்குனர் அப்துல் ஹஃபீசைப் பற்றி சொல்லியாக வேண்டும். இது வரைக்கும் எத்தனையோ சாதனை இயக்குனர்களோடு நான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனா அப்துல் போன்று ஒரு ராட்சசனை நான் பார்த்ததில்லை.. ஒவ்வொரு நாளும் அவர் தரும் ஃபுட்டேஜ் என்பது வேற லெவல். யாரும் கற்பனையே பண்ணிப் பார்க்காத லெவல். ஆனால் காட்சிகள் அவ்வளவு கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருககும். ஒரே நாளில் எடுக்கப்பட்டதா என்று நம்ப முடியாததாக இருக்கும்..

ஒரு முக்கியமான விஷயத்தை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த கதைக்கென்று கற்பனையாக திருநாண் காத்தாள் என்ற ஒரு புது சிறு தெய்வத்தை நான் படைத்தேன். தொடர்ந்து காட்சிகளில் திருநாண் காத்த அம்மன் கோவில் என்று வரவும் தொடரின் ஷெட்யூல் டைரக்டர் எனக்கு மெதுவாக கால் செய்து கேட்டார். 

சார் மன்னிக்கவும்.. நானும் கூகுள் மேப்பில்.. இன்டர்நெட்டில் எல்லாம் தேடிட்டேன். இந்த திருநாண் காத்தாள் கோவில் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. கொஞ்சம் லொக்கெஷனை சொல்றீங்களா.. போய் பாத்து அதுவே செட்டாச்சுன்னா சீனை அங்கயே எடுத்துறலாம் என்றார். எனக்கு அப்போதே புன்னகை வந்துவிட்டது. நிச்சயமாக இந்த கற்பனையில் நாம் வென்று விட்டோம் என்று.. அந்த ஷெட்யூல் டைரக்டரிடம் அப்படி ஒரு கோவிலோ அப்படி ஒரு அம்மனோ நான் இது வரைக்கும் கேள்விப் பட்டதில்லை. இது நான் கற்பனையாக எழுதியது என்று சொன்னாலும் நம்ப மறுத்தார்.

இப்படியாக அந்த காட்சி எடுத்து முடிக்கப் பட்டது. ஆனால் அந்த காட்சியை எழுதும்போதுதான் அபி மற்றும் வெற்றி எனப்படும் இரு மெயின் கேரக்டர்களையும் எப்படி வடிவமைக்கலாம் என்ற தீர்மானம் எனக்குள் வந்தது.

அப்போதுதான் வசனத்திலும் சூடு பிடிக்கத் துவங்கியது.
தொடர்ந்து அபி வெற்றி வீட்டின் முன் வந்து தர்ணா செய்வது. வெற்றியின் அம்மா அவளை வீட்டுக்குள் அழைத்துச் செல்வது வரைக்கும் போனது. அபி வெற்றியின் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்த பின்தான் கதையின் நிறம் மாறத் துவங்கியது. அதாவது நாங்கள் கதையின் போக்கையும் நிறத்தையும் மாற்றத் துவங்கினோம்.. 

மெல்ல அந்த கதை வெற்றி என்ற பொறுக்கியால் தாலி கட்டப்பட்டு அவன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த குடும்பத்தின் அங்கீகாரத்துக்காக போராடும் அபி என்ற அபலைப் பெண்ணின் கண்ணீர்க்கதை என்பதில் இருந்து அபி என்ற தன்னம்பிக்கை தைரியம் மிகுந்த பெண் மற்றும் வெற்றி என்ற சென்சிபிள் பொறுக்கி இருவருக்கும் இடையில் நடக்கும் கேட் அண்டு மவுஸ் கேமாக மாறத் துவங்கியது.. 

இவ்வளவு லைட் வெயிட்டாக கொண்டு சென்றது ‘திரைக்கதை ஆசிரியர் வெற்றியின் வேலை என்றால் காட்சிகளை லைவாக கொண்டு சென்றது டைரக்டர் அப்துலின் சிறப்பு.. 

மெல்ல மெல்ல சீரியலின் கலர் மாறத் துவங்கியதும் யு டியூபில் சீரியலுக்கு வரவேற்பு எகிறத் துவங்கியது.. முதலில் இது சமூகத்தை பல பத்தாண்டுகளுக்கு பின்னிழுக்கக் கூடிய கதை என்று கழுவி ஊற்றியதில் இருந்து (குறைந்ததும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கமெண்டுகளில் கழுவி ஊற்றி இருந்தார்கள்) இப்போது ஐ லவ் திஸ் சீரியல்.. விஜய் டிவியிலேயே உருப்படியான சீரியல் இதுதான் என்று கமெண்டுகளின் கலரும் மாறத் துவங்கியது.

மிகப் பெரிய வரவேற்பு.. மட்ட மதியானம் மூன்று மணிக்கு அனைவரும் உறங்கும் நேரத்தில் வரும் சீரியல்தான். ஆனாலும் ஸ்டெடியான ரேட்டிங். மிகப் பெரிய ரேட்டி.ங்.. சேனலில் எங்களுக்கு மிகப் பெரிய பெயர்.. மற்ற சேனல்களும் எங்கள் டீமை திரும்பிப் பார்க்கத் துவங்கினார்கள்.

அனைவரும் அபி மற்றும் வெற்றியின் இந்த டாம் அண்ட் ஜெர்ரி போராட்டத்தை ஆர்வமாக ரசிக்கத் துவங்கினார்கள்.

உண்மையில் இவ்வளவு பெரிய வெற்றிக்கு யார் மூல காரணம் என்று யோசித்துப பார்க்கிறேன். தென்றலில்தான் ஒரு மிகப் பெரிய டெடிகேட்டட் டீம் அமைந்திருக்கிறது. பேயி என்ற சின்ன கேரக்டர் இருக்கும், அதில் கிருஷ்ணா என்ற ஒருவன் நடிப்பான்.  பல சீரியல்கள் சினிமாக்களில் அடியாளாக கடைசி வரிசையில் நின்று ரியாக்ஷன் மட்டும் காட்டிவிட்டுப் போவான். அவன் கூட இந்த சீரியலில் கடுமையாக உழைத்திருக்கிறான். அவனுக்கும் நல்ல பெயர்.. வெற்றி வீடு என்ற லொக்கேஷன்.. அதை லைவ்வாக மாற்றியதில் பெரும் பங்கு உதவி இயக்குனர் டீமுக்கு.. இசை டீம் வேறு லெவல்.

ஆனால் எந்த சீரியலாக இருந்தாலும் அதனுடைய அடிப்படை திரைக்கதையில்தான் இருக்கிறது. அந்த வகையில் வெற்றி அமைத்துக் கொடுக்கும் எளிமையான திரைக்கதைதான் இந்த சீரியலுக்கு பெரும் வலுவான அடித்தளம். அதன் பின் நான் வசனம் எழுதுகிறேன். அதற்குப் பிறகு எக்சிக்யூஷன் என்ற ஓர் இடம் இருக்கிறது. அங்கேதான் அப்துல் வருகீறார். நாம் பாட்டுக்கு ஒரு  சீனை எழுதி அனுப்பி விடுவோம்.. அதை உயிர்ப்போடு கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவால். அப்துல் அந்த சவாலை அசால்ட்டு பண்ணுவார். 

எபிசோடுகளைப் பார்த்து அவற்றை எழுதிய நானே கண் கலங்கிய அனுபவங்கள் எல்லாம் எனக்கு  உண்டு. அப்துலைப் பொறுத்த வரைக்கும் ஒரு பிடி மண்ணைக் கொடுத்து நடிக்க வை என்று சொன்னாலும் அதை பிரமாதமாக நடிக்க வைக்கக் கூடிய அல்லது பிரமாதமாக நடித்த மாதிரி தோற்றம் தரக் கூடிய வகையில் காட்சிகளை செதுக்கும் திறமை உள்ளவர். அப்துல் இல்லை என்றால் தென்றலின் இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமே இல்லை..

அப்புறம் ஒரு ராட்சசனைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். தென்றலின் சைலண்ட் தூண்.. ஒளிப்பதிவாளர் சரவ் என்று நான் அழைக்கும் சரவணன். லைட்டிங்கிலும் சரி.  காட்சிகளை எடுக்கும் வேகத்திலும் சரி.. சரவணனின் பங்கு மிக முக்கியமானது.. பல ஷாட்களில் என்னை புல்லரிக்க வைப்பார்.

ஓர் உதாரணத்துக்கு சொல்கிறேனே. ஒரு வீட்டில் கரண்ட் போய்விட்டது.. அங்கே என்ன நடக்கிறது என்பது காட்சி.. இரவில் கரண்ட் போய்விட்டது என்றால் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் அதை எடுத்து சபாஷ் வாங்க எந்த ஒளிப்பதிவாளராலும் முடியும்..
ஆனால் தென்றலில் ஒரு காட்சியில் இரவில் போன கரண்ட் பகல் வரை வராது. பகலில் கரண்ட் இல்லாத வீட்டில் நடக்கும் காட்சிகளைப் பார்க்கையில் அந்த வீட்டில் கரண்ட் இல்லை என்று உங்களை நம்ப வைத்துவிடுவார் சரவணன். யோசித்துப் பாருங்கள். ஒரு வீட்டில் பகலில் கரண்ட் இல்லை என்பதை உணர வைப்பது எவ்வளவு பெரிய சவால்.. அதை அசால்ட்டாக சாதிப்பவர் எங்கள் கேமராமேன் சரவணன்..

தென்றலில் பல சாதனைகள் சைலண்டாக செய்யப் பட்டிருக்கின்றன.. முதன் முறையாக  ஒரு சீரியலில்  அண்டர் வாட்டர் ஷாட்கள் எடுக்கப் பட்டிருக்கின்றன. கிணற்றில் குழந்தை விழுந்து அபியும் விழ அவர்களை வெற்றி மீட்பான். அந்த காட்சியில் அண்டர்வாட்டர் ஷாட்கள் பிரமிப்பூட்டும்.. நிறைய எடுத்தோம் சார். கொஞ்சம் தான் பயன்படுத்த முடிஞ்சது என்று சாதாரணமாக சொல்வார் சரவணன்.. இதை எல்லாம் இப்போது வரைக்கும் என்னால் நம்பவே முடியவில்லை.
ஒரு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு முக்கியமானகேரக்டர் அனுமதிக்கப் பட்டிருககிறான். அது அரசு ஆஸ்பத்திரி என்பதை கேமரா கோணங்களிலும் லைட்டிங்குகளிலுமே எளிதாக உணர்த்தி விடுவார் சரவணன். 

இவை மட்டுமல்ல.. கடலுக்குள் ஷூட் செய்திருக்கிறோம். ராஜஸ்தானிய பாலையில் ஷூட் செய்திருக்கிறோம்.. கொடைக் கானலின் குளிருக்குள் ஷூட் செய்திருக்கிறோம். தென்றலில் நாங்கள் காட்டாதது விண் வெளியை மட்டும்தான் என நினைக்கிறேன். 

இப்போது வரைக்கும் தென்றல் சீரியலைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாரும் பார்க்க சினிமா மாதிரி இருககிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் அப்துலின் ஷாட் டிவிஷன்களும்.. சரவணனின் ஒளிப்பதிவும்தான். 

அது மட்டுமல்ல.. துவக்கத்தில் மூட நம்பிக்கையை வளர்க்கும் சீரியல்.. இது சமூகத்தை பிடித்த சாபக் கேடு என்று அவ்வளவு வசைகளை வாங்கிய இந்த சீரியலில்தான் நாங்கள் முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தினோம். சீரியல் வரலாற்றில் முதல் முறையாக சுயமரியாதை திருமணம் ஒன்றை கறுப்புச் சட்டைகள் முன்னணியில் நடததிக் காட்டினோம்.. அதுவும் வரவேற்புப் பெற்றது. முக்கியமாக பெண்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றதுதான் எங்களது மாபெரும் சாதனை என்பேன். அதற்கு காரணம் எங்கள் மூவருக்குள் இருந்த முற்போக்கு கருத்தொற்றுமை.. அது தவிர அனைத்தையும் அனுமதித்த விஜய் டிவியின்சுதந்திரம். இந்த தருணத்தில் விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றியை சொல்லியே ஆக வேண்டும்.. 

இப்படியாக எங்கள் அனைவரின் அசுர உழைப்பினால்தான் தென்றல் உருவாகி நல்ல பெயரை பெற்று வருகிறது.

நான் நண்பர்களிடம் வேடிக்கையாக சொல்வேன். போன ஜென்மத்தில் ஒரு பெண்ணை மூன்று ஆண்கள் காதலிதது திருமணம் முடித்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி இருப்பார்கள்.. அல்லது ஒரு ஆணை மூன்ற பெண்கள் லவ் பண்ணி   திருமணம் செய்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி இருப்பார்கள். 

அப்படியான நான்கு பெயர்தான் அப்துல், வெற்றி, நான், சரவணன் என்று.. அந்தளவுக்கு எங்கள் நால்வர் மத்தியில் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகும்..

** 

அப்புறம் வந்ததுதான் செந்தூரப் பூவே.. அது ஏற்கெனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல். அதற்கு முதன் முறையாக பாஸ்கர் சக்தி கமிட் ஆனார். என்னை எழுத முடியுமா என்று கேட்டார்கள். பாஸ்கர் சக்தி எனது குருநாதர். அதனால் உடனே உற்சாகமாக சம்மதித்தேன். எழுதத் துவங்கினேன்.

பாஸ்கர் திரைக்கதையில் எனது  வசனத்தில் செந்தூரப் பூவே துவக்கத்தில இருந்த ரேட்டிங்கிலிருந்து சர் சர்ரென்று ஏறி வேறு லெவலை அடைந்தது. அதிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.

பின்னர் பிக் பாஸ் துவக்கம் காரணமாக அது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு இப்போது இரவு பத்தரைக்கு ஒளிபரப்பாகிறது.

இடையில் ஈரமான ரோஜாவே இரண்டாவது சீசன் துவங்கியது. அதற்கும் நாந்தான் வசனம் எழுதுகிறேன். சென்ற வாரம் லாஞ்ச் ஆன அந்த தொடருக்கும் பெரிய வரவேற்பு. பத்து மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும் அந்த சீரியலும் எதிர்பார்த்ததை விட மிக மிக அதிகமான ரேட்டிங் கொண்டு பெரிய பெர்ஃபர்மென்ஸ் செய்து கொண்டிருக்கிறது. சேனல் வட்டாரங்களில் எங்கள் டீமுக்கு மிகப் பெரிய பெயர்..

நண்பர் ஜோ ஜார்ஜ் இதுதான் தொட்டதெல்லாம் துலங்குறதுன்னு சொல்லுவாங்க என்றார். இல்லை. அப்படி இலலை., இது இருபது வருட கடும் உழைப்பு.. கடும் கற்றுக் கொள்ளலின் பின் விளைவு என்று சொன்னது என் மனம்.

நான் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொண்டே இருக்கிறேன். அதனால்தான் என்னால் என் வேலையை சிறப்பாக செய்ய முடிகிறது.
அது மட்டும் அல்ல. வேலைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கிறேன். ஒரு சோகக் காட்சியை நான் எழுதும்போது அதை யோசிக்கும்போதே எனக்கு கண் கலங்குகிறதா என்று பார்க்கிறேன். அதன்பின்தான் அதை எழுதவே ஆரம்பிக்கிறேன்.

ஒரு காமெடி காட்சியை எழுதத் துவங்குகிறேன். அதை மனசில் கற்பனை செய்கையிலேயே  எனக்கு சின்ன புன்னகை வருகிறதா என்று பார்க்கிறேன். எழுதும் எல்லா காட்சியிலும் ஒரு சின்ன டிராமாவாவது வைக்க முடியுமா என்று தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருக்கிறேன்.

இது இருபது வருட கடும் உழைப்பின் அறுவடைக் காலம். அதனால்தான் கடுமையாக உழைக்கிறேன்.
ஒரு நாளைக்கு சில நேரம் பதினெட்டு மணி நேரம் கூட உழைக்க வேண்டி இருக்கிறது. எனது ஒவ்வொரு நிமிடமும முக்கியமானதாக இருககிறது. நண்பர்களுக்கு கால் செய்ய நேரமில்லை.. கால செய்யும் நண்பர்களின் கால்களை அட்டண்ட் செய்ய முடிவதில்லை.

மறுபடி மறுபடி கால் செய்து தோற்கும் நண்பர்கள் சில நேரம் உன்னை நான் நண்பனாக நினைத்ததை அவமானமாக நினைக்கிறேன் என்று என்னை நட்பு விலக்கம் செய்து நகர்ந்து போகிறார்கள்.

ஒரு பக்கம் எப்புடி இத்தனை சீரிய,ல் எழுதுற என்று சில நண்பர்கள் ஆச்சரியப் படுகிறார்கள்.
பெரிதாக ஒன்றும் இல்லை. எனக்கு இப்போதுதான் நான் நினைத்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது. இதை வைத்தே சொந்தமாக ஒரே ஒரு வீடு. சின்னதோ பெரிதோ. ஒரு சொந்த வீடு. அவ்வளவுதான் எனது தேவை.. அதற்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைக்கிறேன்.

நாற்பது வயதுக்கு முன்னால் ஒரு மனிதன் வீடு கட்ட ஆசைப் பட்டால் அவன் வாழ ஒரு வீடு கட்டுகிறான் என்று பொருள்.

ஐம்பது வயதுக்கு மேல் ஒரு மனிதன் ஒரு சின்ன வீடாவது கட்ட ஆசைப்பட்டால் அவன் நிம்மதியாக சாக ஒரு வீடு கட்டுகிறான் என்று பொருள்.
நான் அப்படியாகத்தான் ஒரு வீடு கட்ட ஆசைப்படுகிறேன்.

கூடிய விரைவில் அது நடந்துவிடும் என நம்புகிறேன். அதற்காகத்தான் இவ்வளவு உழைப்பும்..

போன வாரம் ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கொஞ்சம் ஓவராகப் பேசுவார். வந்து அவரது அருமை பெருமைகளை எல்லாம் சொல்லி முடித்தார். இவ்வளவு பெரிய வீட்டுல குடியிருக்க? எம்புட்டு வாடகை என்று கேட்டார். சொன்னேன். அவர் நம்ப முடியாமல் இம்புட்டு வாடகை குடுககுறதுக்கு பேசாம வீடு கட்டி ஈ எம் ஐ கட்டிறலாம்ல்ல..? என்றார்..

அண்ணே எனக்கு அம்பது இப்பதான் தாண்டுச்சு இதுக்கு மேல ஈஎம்ஐ சாத்தியமாண்ணே. அதான் வர்ற வருமானத்த சேத்து வச்சு வீடு கட்டலாம்னு பிளான் பண்ணுறேன் என்றேன்.

அவர் மேலும் கீழும் பார்த்தவர் ஒனக்கு மாசம் எம்புட்டு வருமானம் வருது..? என்றார்.

ஒரு கணம் சொல்ல முடியாது என்று சொல்லிவிடலாம் என்று தோன்றிது. சரி இவரை சீண்டி விட்டால் என்ன என்ற சிறு ஆசையில் உண்மையான வருமானத்தை சொன்னேன்.

தலைவன் ஆடிப் போய் ஐந்து நிமிடம் பேச்சற்று உட்கார்ந்திருந்தார். பின்னர்தான் அவருக்கு உண்மை உறைத்தது போல.

பரவால்லையே. உன்னை மாதிரி எல்லா சேனல்லயும் கான்டாக்ட் புடிச்சு இந்த மாதிரி ஒரு கம்ப்யூட்டரை வாங்கி போட்டு உக்காந்துட்டா போதும் போல இருக்கே. உக்காந்த இடத்துல இருந்தே பெரிய வருமானம் பாக்கலாம் போல இருக்கே.. என்றார்.

இல்லண்ணே இதுக்குப் பின்னால இருவது வருஷம் நான் போராடுன பெரும் போராட்டமும் அதன்மூலம் கிடைச்ச அனுபவமும் இருக்குண்ணே. யாரா இருந்தாலும சேனல்ல ஆள் புடிச்சு கம்ப்யூட்டரை போட்டு உக்காந்து டைப் பண்ணி சம்பாதிக்க முடியாதுண்ணே என்று சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.

அவர் கிளம்பும்போது விஜய் டிவில யாராவது தெரிஞ்ச ஆளுகளோட நம்பரை குடுங்க. எம்பையன் இந்த மாதிரிதான் எழுத ஆசைப்படுறான் என்றார்..

எனக்குத் தெரிந்தவர்களின் முகங்களை நினைத்துப் பார்த்தேன். சிரித்தேன்.

ஆமா.  நீ பெரிய இவன்.. உன்னோட ஆளுகள நீயே வச்சுக்க போ.. என்று கோபமாக தெருவில் இறங்கி நடந்து போனார் அந்த அண்ணன்.

நான் மறுபடி உட்கார்ந்து எழுதத் துவங்கினேன்..

******  

இதை எழுதி  நான்கு வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் அந்த வீட்டைத்தான் நான் கட்டவே இல்லை.. கட்டுவேனா என்று கூட தெரியவில்லை.. இந்த நொடி வரை எதிர்பாராத செலவுகள் தொடர்ந்து வந்து கழுத்தைப் பிடித்தபடிதான் இருக்கின்றன. நானும் சிரித்தபடி அனைத்தையும் சமாளித்தபடிதான் இருக்கிறேன்.

யோசித்தால் புரிகிறது. எழுதுவது எனது ஆசை. இந்த எழுத்து எனக்கு வீடு கொடுக்கும்.. பங்களா கொடுக்கும் என்ற லட்சியத்தோடா நான் எழுதத் துவங்கினேன்.? பிடிச்சிருக்கு.. எழுதுறேன். பிடிச்சதை செய்ய சம்பளமும் வாங்குறேன். அவ்வளவுதானே.. இப்போது  தொடர்ந்து வரும் இது போன்ற செலவுகளை தைரியமாக சமாளிக்க வசதியாவது இருக்கிறதே.. அதுவே போதும் என்று தோன்றுகிறது.

வீடுதானே பாஸ்.. கற்பனையில் டிசைன் டிசைனாக கட்டிப் பார்த்து வாழ்ந்து பார்த்தால் போகிறது. நமக்குதான் வாடகைக்கு விடுவதற்கு என்று ஊரில் ஏராளமான நல்ல மனதுடையவர்கள் வீடு கட்டி விட்டிருக்கிறார்களே..

இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு ஊரே வீடுதானே.. எனக்கோ இந்த உலகமே வீடாக இருக்கிறது. அப்புறம் என்ன., என்னோட வீடு ரொம்ப ரொம்ப பெரிசு பாஸ்.. 

லவ் யு ஆல்..

Comments