கொற்றவை - ஆர். பாலகிருஷ்ணன் Kottravai - R.Balakrishan

படைப்பில் தன்னை
பார்வையாளனாக மட்டும்
ஆண் உணர்ந்து
பயந்திருந்த காலம்.

வேட்டையாடித் 
திரிந்தவன்..
பிறப்பின் ‌ரகசியம்
புரிந்தவன் அல்ல.

காட்டில் "இனிஷியல்"
வைத்துத் திரிந்தது
எந்தப் புலி...?

பெண்ணே 
ஆணையும் பெற்றாள்
என்பதில் 
ஆரம்பித்தது அவன் அச்சம்.
மாதக்குருதி 
அவனை‌ மட்டுமல்ல
அவளையும் கூட
பயமுறுத்தியது..

அது ஒரு மாயம் போல
வந்து மறைந்தது.

கர்ப்பிணிகளின்
பெருத்த வயிறு 
படைப்பை நிகழ்த்தும்
பானையாய்..
பனிக்குடம் உடைத்து
ரத்தச் சகதியில்
விழித்து அழுதது
தொப்புள் கொடி தாங்கி
இன்னொரு புதுத்தலை...

கொற்றவையாய்
கொல்லிப்பாவையாய்
அணங்காய் துணங்காய்
ஆடித்தீர்த்தாள் அன்னை.

சிந்துவெளியில்
அவள் 
எதைத் தொலைத்தாள்
கீழடியில் எதை மீட்டாள்?

கண்ணகி முலை அறுத்தாள்
காரைக்கால் அம்மை 
முலை தொலைய 
வரம் கேட்டாள்.
கேரளத்தில் 
இன்னொருத்தி
முலையறுத்துக் கொடுத்தாள்
வரித்தொகையாய்.

இவை.
ஆறும் சினம் அல்ல
என்று
அடிக்கோடிட்ட
ஆறாச் சினம்.

இதோ..
சேரர் பூமியில்
மகளிர் எழுப்பிய
மதிலில்
யுகங்களுக்கான
கேள்விகளும் ‌பதில்களும்..

கொற்றவை சிரித்தாள்
கொல்லிமலையில்...
"பால் கொடுத்த புலி"யின்
பக்கத்தில் நின்று...

ஆர்.பாலகிருஷ்ணன்
05/ 01/ 2019

Comments