புலம்பெயர்வு - AD பாலா

வட நாட்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் பெருமளவில் தமிழ்நாட்டுக்கு வருவதால் இங்கே பெரிய மக்களியல் (டெமாகிரஃபிக்) மாற்றம் நிகழ்கிறது. இந்த சிக்கலை அதற்குரிய கண்ணியத்தோடும், கவனத்தோடும் அணுக வேண்டும். 

அதற்குப் பதிலாக அந்த தொழிலாளர்களின் சமுதாய, பொருளியல் நிலையை கேலி செய்வது, அவர்களது ரயில் பயணத் துயரங்களையும் அத்துமீறல்களையும் மேட்டிமைத் திமிரோடு கிண்டலடிப்பது ஆகியவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

இதில் தெறிப்பது சாதியாதிக்கத் திமிர் என்றாலும் தமிழ்த் திமிர் என்றாலும் அருவருப்பானதே. இவர்களில் சிலர் திராவிட இயக்கத்தை, சுயமரியாதை இயக்கத்தை கவசமாகப் பிடித்துக் கொண்டு இந்த வசைகளை எறிகிறார்கள். 

ஆனால், இந்த வசைகளுக்குப் பின்னால் இருப்பது இந்த இயக்கங்களின் கருத்தியலுக்கு நேர் முரணான உணர்வே. 

பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளியை நோக்கி வெளிப்படும் இதே மேட்டிமைத் திமிர்தான் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம், மராட்டியம், கேரளம் செல்லும் தமிழ்நாட்டுப் புலம் பெயர் தொழிலாளிகளிடமும் இவர்களுக்கு இருக்கும். என்ன ஒன்று... முகநூலில் அது வெளிப்படாது.
 
இங்கே வெறும், ரயில் பெட்டிகளில் அத்துமீறி ஏறும் தொழிலாளர்கள் மட்டும் வரவில்லை. விமானங்களிலும், ஏ.சி. பெட்டிகளிலும் வரும் பணியாக்களும் வருகிறார்கள். 

தமிழ்நாட்டின் மொத்த வணிகம் முழுவதும், சில துறைகளில் சில்லறை வணிகங்களும் சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சொகுசு வீடுகளில் பெரும்பகுதியும் யாரிடம் செல்கின்றன என்பது ஒன்றும் ரகசியம் இல்லை. 

இதன் மறுபுறமாக, கட்டுமான உடலுழைப்பு வேலை தேடி தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் பெருமளவில் கர்நாடகம் செல்கிறார்கள். பூந்தோட்ட வேலை தேடி கேரளம் செல்கிறார்கள். ஆந்திரக் காடுகளுக்கு செம்மரம் வெட்டச் சென்று செத்து மடிகிறார்கள். 

ஏற்கெனவே பெருமளவிலான தமிழ்த் தொழிலாளர்கள் மும்பையில் இருக்கிறார்கள். டெல்லியில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் இருக்கும் என்றொரு மதிப்பீடு உண்டு. இவர்களில் கணிசமானவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள். 

தில்லி ஜல்போர்டு காலனி என்ற இடத்தில் உள்ள குடிசைப் பகுதி முழுவதும் வட தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்தான். அவர்களின் வாழ்நிலை கொடுமையானது. 

எனவே, வட இந்தியத் தொழிலாளர்கள், டிக்கெட் இல்லாத பயணம், பான்பராக் வாய், பானிபூரி கடை என்றெல்லாம் ஸ்டீரியோ டைப்பிங் செய்வதில் பொருள் ஏதுமில்லை. உண்மைகள் அதைத் தாண்டியும் இருக்கின்றன. 

தவிர, திராவிடம் என்பது வெறும் தென்னாட்டு மக்களைக் குறிப்பது மட்டுமாக இனியும் கருதவியலாது.   தேகம் கருத்த திராவிடத் தோற்றம் கொண்ட பிகார் தொழிலாளர்களே தில்லியில் வசைக்கும் இழிவுக்கும் ஆளாகிறார்கள்.

தில்லியில் கேலிக்குள்ளாகும் அவர்களின் பண்பாட்டு நிலை சென்னையிலும் கேலிக்குள்ளாகும் என்றால், இதற்குப் பெயர் என்ன?

ஜெய்ப்பூர் அருகே உள்ள அம்பர் கோட்டைக்குச் செல்லும் மலைப் பாதையில் மைபோல் தேகம் கருத்த ஒரு மனிதர் உட்கார்ந்து கையில் உள்ள கருவியை உருக்கமாக இசைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவரிடம் அந்தக் கருவியின் பெயர் என்ன என்று கேட்டேன். 'ராவண ஹர்த்தா' என்றார். அனேகமாக பழங்குடியாக இருப்பார். 

படத்தைப் பகிர்ந்திருக்கிறேன் பாருங்கள். 

இவர் ஆரியரா திராவிடரா? 

இவரே புலம்பெயர் தொழிலாளியாக தமிழ்நாட்டுக்கு வந்தால் இவரை எப்படி அணுக வேண்டும்?

புலம்பெயர்தல் மனிதகுலத்தின் இயற்கை விதி. புலம் பெயர்தலே மனித குலத்தில் காணும் மரபணு மாறுபாடுகளைத் தோற்றுவித்தது.

மனித குலத்தின் வரலாற்றையும் வடிவமைத்தது. 

புலம் பெயர்ந்து வருவோரை எதிர்ப்பது மேற்கத்திய நாடுகளில் வலதுசாரிப் பண்புகளில் ஒன்று. 

வேலியில்லாமல் திறந்துபோட வேண்டும் என்று அதற்குப் பொருளுமில்லை.

Comments