அன்புத் தங்கை ஷண்முக பிரியாவுக்கு ஒரு பாராட்டு விழா

தேசிய திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்பை என்னால் முடிந்த வரை முன்னெடுப்பதால் ஆறு மணிக்கு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்த பேராவூரணியின் பேரன்பு ஊரணி தோழி Shanmuga Priya சண்முகப்பிரியாவின் பாராட்டு விழாவிற்கு 8 மணிக்கு தான் செல்ல முடிந்தது. இவ்வளவு தாமதமாக கிளம்புகிறோமே விழாவிற்கு முடியும்போதாவது சென்றுவிட முடியுமா என்கிற பதட்டத்தில் தோழர் மெய்ச்சுடர் வெங்கடேசன் தோழரிடம் தெரிவித்த போது, நீங்க வாங்க தோழர் சிக்கல் இல்லை என பதட்டம் தணிக்கும் நட்பான குரலில் மகிழ்ச்சியாக வரவேற்றார். தாமதமாகி விட்டதற்கான எந்த பரபரப்பும் இல்லாமல் நட்புகளை சந்திக்கிறோம் என்கிற மனநிறைவோடு நிதானமாக தான் நானும் இணையரும் கிளம்பினோம். 

 தீப்பொறி என நான் செல்லமாக அழைக்கும் தோழி சண்முகப்பிரியா, மலேசிய வாழ் தமிழ் மாணவர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்பித்தார். அவரது தமிழின் ஆளுமையில் நம்மை போலவே கட்டுண்டு போன மாணவர்கள் தங்கள் பட்டமளிப்பு விழாவுக்கு தோழர் சண்முகப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்ததால், அவர்களது சிறப்பு அழைக்கும் பேரில் சமீபத்தில் மலேசியா சென்று திரும்பி இருக்கிறார். அவரை பாராட்டும் விதமாக பேராவூரணியின் அன்பு உறவுகள் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் அது நேற்று 7.2.25 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 

       விழாவின் நிறைவுப் பகுதிக்கு சற்று முன் தான் அங்கு சென்று சேர்ந்தோம். அல்லது விழா நட்புக்காக சற்று நேரம் கூடுதலாக நடத்தப்பட்டதோ என்று எனக்கு தோன்றவும் செய்தது. மிகவும் பொருள் பொதிந்த, நம் மொழியின் கம்பீரத்தை  உணர்ந்து பெருமிதப்படக் கூடிய வகையில் விழா அமைந்தது. சண்முகப்பிரியாவின் தமிழைப் போலவே அவரது இணையர் தோழர் சிவக்குமார் சண்முகப்பிரியாவின் மீது கொண்ட அன்பும் அத்தனை மேன்மையானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது.

        நம் வீதி அமைப்பு போல உறவாகவும், திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பை போல நட்புணர்வாகவும், பேராவூரணியின் கெழுதகையீர் உறவுகளை உணர முடிந்தது. குழந்தைகள் நிறைந்த அந்த விழாவில், பெரியவர்கள் கூட குழந்தை மனதோடு சிரித்தபடி பேசியது நிமிடங்களை இறக்கை கட்டி பறக்க வைத்தது. விழா முடிந்த பின் டபரா செட் எனும் அழகான தாபா ஒன்றிற்கு அனைவரும் சென்று உணவு அருந்தி கிளம்புவதற்குள் மணி 11 கடந்து விட்டது. ஒரு புதிய ஊரில் புதிய குழுவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாதவாறு   உறவாக பழகிய ஒரு சூழலை ஏற்படுத்தியது போல் இருந்த அத்தனை நட்புறவுகளும் கண்ணில் நிறைக்க உள்ளம் மகிழ, அடுத்த முறை நம் வீட்டிற்கு வந்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று அழைத்த எல்லா நட்பு குடும்பங்களுக்கும் மற்றொரு முறை வருவதாக கூறி கிளம்பிய தருணம் நெஞ்சம் நிறைத்தது. 

      வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு, விழாவிற்கு நான் கல்லூரி முடித்து சில காலமே மணப்பாறையில் பணியாற்றிய போது என்னிடம் பயின்று இப்போது வரை என் பிள்ளையாக இருக்கும் அலெக்ஸ் என நான் அழைக்கும் அலெக்சாண்டர் வருகை தந்து என்னை தனது ஏவிஎம் பிரிண்டர்ஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இரவு 11 மணிக்கு ஷட்டரை ஏத்தி, அப்பா வந்து பாருங்க, அம்மா இந்த ரூம் பாருங்க என என்னையும், கஸ்தூரியையும் ஒவ்வொரு அறையாக சுற்றி காட்டிய போது, ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் உணர்வை அடைந்தேன். 

           கஸ்தூரியின் கல்லூரி நண்பரான அண்ணன் பெருமாள் அவர்கள் தற்போது பேராவூரணியில் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவரது அன்பும் அளப்பரியதாகவே இருந்தது. மணி முன்னிரவு கடந்து கொண்டிருக்க நம் வீட்டிற்கும் வந்து விட்டுச் செல்ல வேண்டும் என்று அழைத்துச் சென்று மிக அழகிய தென்னைகள் சூழ்ந்து பாரம்பரியமான அழகிய வீட்டை, அன்பு குடும்பத்தை அறிமுகம் செய்து மனம் இல்லாத வழி அனுப்பினார். நாங்கள் வீடு சேரும் வரை பத்திரமாக வந்து விட்டோமா என்று கேட்டுக் கொண்டே இருந்த  பேராவூரணி சொந்தங்கள் என்றென்றும் மறக்க முடியாத அனுபவத்தை தந்திருந்தது. ஒவ்வொரு பெயராக குறிப்பிட ஆசைதான் ஆனால் கட்டுரை மிக நீண்டு விடும். உங்கள் அத்தனை பேரின் பெயரும் எனது உள்ளத்தில் இருக்கிறது. அன்பு உறவுகள் அத்துணை பேருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்❣️
மைதிலி கஸ்தூரி ரங்கன்

Comments