வணக்கம்
இனியன்
பல்லாங்குழி அமைப்பு சிறு அறிமுகம்
இனியன் திருச்சியில் பிறந்து பயின்று வளர்ந்தவர். கணிப்பொறியில் பொறியியல் பட்டமும், நெட்வொர்க் இன்ஜினியரிங்கில் சான்றிதழ் படிப்பு முடித்துவிட்டு மென்பொருள் துறையில் பணியில் இருந்தவர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு பூச்சி அவரைக் கடித்து விட்டது . அரிதினும் அரிய நிகழ்வாக அதன் பின்விளைவுகள் அவர் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது.
சாதாரண பூச்சிக்கடியாக இல்லாமல், கடிபட்ட இடத்தில் இரத்தம் கட்டி. இரத்தஉரைதல் ஏற்பட்டு நுரையீரல் செயல் இழப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு போய்விட்டார்.
கோமாவில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கே மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.
அதன் பிறகு உடல் இயக்கம் செயல் இழக்க துவங்கிவிட்டது.
வெள்ளூர் சிஎம்சி மருத்துவமனையின் கனிவான கவனிப்பில் மெல்ல மெல்ல உடல் இயக்கங்கள் மீண்டு, இவருக்காக சேவை கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு நடமாட துவங்கினார்.
இவரை கடித்த விஷம் கொண்ட பூச்சி இந்தியாவிலேயே இல்லை. அப்புறம் எப்படி இவ்வளவு விஷம் ?
அடைசல் நிறைந்த பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாழுகின்ற சிலந்திகள் கொடும் விஷம் உடைய பூச்சிகளாக மாறுகின்றன என்பதுதான் இவரைப் பரிசோதித்த டாக்டரின் முடிவு.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்திற்கு திருப்பி வந்த இனியன் தன்னுடைய வணிகத்தை இழந்திருந்தார், தந்தையாருடைய ஓய்வூதியம் மொத்தமும் செலவாகி இருந்தது மொத்தத்தில் பூஜ்ஜியம் நிதி இருப்பு.
மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த இனியன் தோன்றுகிற நேரத்தில் தோன்றுகிற ஊருக்கு புறப்பட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அப்படிப் போகிற இடங்களில் பெரியவர்களை சந்தித்து மரபு சார்ந்த சிறார் விளையாட்டுகள் என்னென்ன என்பதை கண்டறிந்தார்.
இப்படி அவர் கண்டறிந்த விளையாட்டுகள் 256.
இதை ஏன் குழந்தைகளிடம் எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்று துவங்கியதுதான் பல்லாங்குழி அமைப்பு.
பல்லாங்குழி அமைப்பு ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்து தேர்ந்தெடுத்த புத்தகங்களை வாசிக்க தந்து அப்புத்தகங்களை விமர்சிக்க செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.
இந்த நிகழ்வில் கோமாளிகள் கூத்து உண்டு, சிறார் நாடகம் உண்டு. அதிசயத்திற்கு அறிவியல் செயல்பாடுகளும் உண்டு.
கடந்த 22 பிப்ரவரி 2025-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிங்கப்பூர் டிவிஎஸ் திருமண மண்டபத்தில் 300க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்ட குழந்தைகளுக்கான கலை இலக்கியத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் இனியன்.
நரிக்குறவர் சமூகத்து மாணவர்கள் தொடங்கி தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட 17 குழந்தைகளுக்கு மேடையில் பேசும் வாய்ப்பளிக்கப்பட்டது.
சமூகத்தை நேசிக்கிற 17 படைப்புகள் இனங்காணப்பட்டு அவையே குழந்தைகளுக்கு வாசிக்க தரப்பட்டன.
நிகழ்வு இரண்டு பராக்களில் முடிந்துவிடுகிற விஷயம் அல்ல.
கடந்த ஒரு மாதமாக இனியன் புதுக்கோட்டையில் தங்கி இருந்து ஒவ்வொரு பள்ளியாக சென்று மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பேசப் பயிற்சி அளித்து உருவாக்கினார்.
அரங்கம் நிறைந்த குழந்தைகள் இருப்பு இனியனின் தனிப்பட்ட உழைப்பு.
கேகே நகர் என்று அழைக்கப்படும் நரிக்குறவர் சமூகத்து மக்கள் வாழும் பகுதியில் துவங்கி, போஸ் நகர் குடியிருப்பில் குழந்தைகளை அடையாளம் கண்டு, புரிதல் உள்ள தலைமை ஆசிரியர்கள் இருக்கிற பள்ளியில் மாணவர்களை சந்தித்து ஒரு பெரும் படையை உருவாக்கி தந்து விட்டு போயிருக்கிறார் இனியன்
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சுமார் புத்தகங்கள் உள்ளிட்ட18 விளையாட்டு பொருட்கள் அடங்கிய பரிசுப்பை வழங்கப்பட்டது.
புதுகையில் இருந்து மதிய உணவு பொறுப்பை மட்டும் எடுத்துக் கொண்டனர் புரவலர்கள், ஏ கே பி மெட்டல் பிரைவேட் லிமிடெட் இன் இயக்குனர் சண்முகராஜ், இப்ராஹிம் பண்ணையின் நிறுவனர் டாக்டர் சாதிக் மற்றும் மருத்துவர் ராமதாஸ் குழந்தைகளுக்கான மதிய உணவை வழங்கி சிறப்பித்தார்கள்.
வீதியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீதா, விதைக்கலாம் குழுவினர், கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன், கவிஞர் ரேவதி ராம், புதுகை செல்வா. விதைக்கலாம் மலையப்பன், இலக்கியா மலையப்பன், சிறார் எழுத்தாளர் பாஸ்கரன். விவோ ஜஹாங்கீர், விதைக்கலாம்பாலாஜி, சோபியா பாலாஜி, விதைக்கலாம்பிரபாகரன், தமிழன் கௌதம், என பல தன்னார்வலர்கள் இந்நிகழ்வின் பின்புலத்தில் இருந்து இயங்கினார்கள்.
.
இது தவிர பல்லாங்குழி அமைப்பின் முந்தைய குழந்தைகள் திருவிழாவில் கலந்து கொண்ட தன்னார்வலர்களும் வருகை தந்திருந்தனர். சிறர் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், இந்நிகழ்வில் மிக நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்தார்
Comments
Post a Comment
வருக வருக