மொய் விருந்து

பேரா. விஸ்வநாதன் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் என்று தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். மிகப்பெரிய தமிழ்ச்சேவை இது.

அவரின் நூல் அறிமுகம் ஒன்று.

நல் வணக்கங்கள்🙏

மொய்விருந்து சாப்பிடலாம் வாங்க.

நம் வீட்டுத் திருமணத்தின் போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்பாகத் தரப்படுகிறதல்லவா? அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப் பணத்தைத் திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ் மூலமாகக் கேட்பார். அவர் கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்கு நாம் கொடுக்க வேண்டிய ரொக்கத்தைக் கொடுத்து விட்டுவர வேண்டும். இதுதான் மொய்விருந்து! அப்படிக் கொடுக்கும் போது இப்படிப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித் தொகையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த விருந்திற்கு நாம் போக மறந்தால் கடிதம் மூலமாகவோ அல்லது ஆள் மூலமாகவோ அந்தப்பணம் வசூல் செய்யப்படும். 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த மொய்விருந்து நடைமுறை ( பேராவூரணி பகுதியில்) அதிகமாகக் காணப்படுகிறதாம்.
.............
பந்தலில் மணம் பரப்பியதரையில் தான் கறிவிருந்து. உள்ளூர் சலவைத் தொழிலாளி விரித்துப் போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.வடித்த சோறும், ஆட்டிறைச்சிக் குழம்பும் பரிமாறப்படும். இந்தக் குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் சற்று தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.

ஒரே நாளில் பல மொய் விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பல வீடுகளில் சாப்பிடுபவர்களும் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்து போய் வீட்டில் தண்ணீர் சோறும் பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.
.......
விருந்து முடிந்த பிறகு தாமதமாக மொய் செய்பவர்களுக்கு "பின்வரவு" என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளன பேச்சிற்கு உட்பட வேண்டியிருக்கும்.

நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கெனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்கு என்று வரும் பணம் " புதுநடை " என்ற தலைப்பில் எழுதப்படும். அன்மைக் காலத்தில் எதிரியாகிப் போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால் கூட சேரவேண்டிய மொய் சேர்த்து விடும்......

பேராவுரணி பகுதியில் உள்ள மொய் பற்றிய சுவையான தகவல்கள் சில....👆
பக், 274 - 276.
 (முதலில் அகமுடையார் சமூகத்தில் மட்டுமே இருந்த இந்த மொய்ப் பழக்கம் தற்போது மற்ற சமூகங்களுக்கும், ஏன் இஸ்லாமியர்களிடையே கூட வந்துவிட்டது)
                  ......
சோமலேயின் மாவட்ட வரலாறுகள் போல முனைவர் அறிவொளி.மு.முருகேசன் அவர்களின் தஞ்சை மாவட்ட வரலாறும் அமைந்துள்ளது. 

"தஞ்சாவூர் மாவட்ட வரலாறு என்ற இவரது இந்த நூலில் எந்தத் தகவலையும் சொல்ல மறக்கவில்லை. "Encyclopedia on Tanjore"
என்று சொன்னால் இது மிகையாகாது" என்கிறார் தஞ்சை அ.ராமமூர்த்தி.

மாவட்ட நில அமைப்பு,, கனிம வளம், காட்டுவளம், மன்னர்களின் வரலாறு, மக்கள் தொகை, சமய நிறுவனங்கள், வேளாண்மை , பெரியகோயில், கல்லணை, தொழில், வணிகம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, கலைகள், ஊர்ப் பெயர்கள், நீதிமன்றங்கள் என்ற தலைப்புகளில், தஞ்சை மாவட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை, மிகுந்த முயற்சியில் திரட்டி சுவையான மொழி நடையில் தந்திருக்கிறார் முருகேசன். மேலே குறிப்பிட்டது போல் மொய் போன்ற சமூகப் பழக்க வழக்கங்களையும் பதியத் தவறவில்லை.

மாணவர்களுக்கு பயன்படும் இது போன்ற நூல்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எழுதப்பட வேண்டும்.

வெற்றி மொழி வெளியீட்டகம்,
திண்டுக்கல்.
9715168794
ரூ.400/-

Comments