காகிதக்கொக்கு

மலர்த்தரு வலைப்பு 18 இலட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது.

2014 இல் இருந்து எழுதிக் கொண்டிருந்தாலும் சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை.

நான் எழுதுவதை நிறுத்தினாலும் கட்டுரைகள் தொடர்ந்து வாசிக்கப்பட்டிருக்கின்றன: 

கிட்டத்தட்ட 90 சதவிகிதம் சுயமாக எழுதிய கட்டுரைகள்தான், மீதம் இருக்கும் கட்டுரைகள் நண்பர்கள் பகிர்ந்த கட்டுரைகள்.

அருமை சகோதரி தேவதா தமிழ் கீதா இணைந்த கரங்கள் என்கிற ஒரு அமைப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியிருந்தாலும், வீதியில் தன் முழு கவனத்தை செலுத்தி இருந்ததால் இணைந்த கரங்களை இயக்குவதில் சில பிரச்சினைகள் இருந்தது அவருக்கு.


என்னைப் பொருத்தவரை மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத்தில் இருந்து செயலுக்குப் போக வேண்டும் என்பதற்கான நிர்பந்தங்கள் ஏற்பட்டுவிட்டது.

இனிமேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்தேன். தர்மமிகு சென்னையில் தான் நிகழ்வை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டேன்.

எதிர்பாராத விதமாக தோழர் ஒருவர் ஓவியா பதிப்பகத்தார் வெளியிட்ட தோழர் ஆர் கருப்பையா என்கிற நூலை எடுத்துச் செய்யுங்கள் என்றார்.

அந்த நூலைக் குறித்து யார் பேசுவார் என்ற போது அவர் பரிந்துரைத்த பெயர் மைதிலி!

நீண்ட காலமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பெருங்குடி பாலாஜி, அக்கு சிகிச்சையாளர் மற்றும் பொறியாளர் ச நடராஜன், முதுகலை கணித பட்டதாரி பி. மணிகண்டன், வேதியல் இளங்கலை படித்துக் கொண்டிருக்கும் என்னுடைய மாணவர் பழனி முருகன் ஆகியோரை என்ன செய்யலாம் என்று கேட்ட பொழுது, எப்படி திட்டமிட்டாலும் செய்து முடித்து விடுவோம் என்றார்கள் ஒரே குரலாக .

பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஏற்கனவே பயணித்திருப்பதால் ஒவ்வொருவரிடமும் இதுபோன்று ஒரு நிகழ்வைத் திட்டமிட்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது.

வீதி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீதா தாராளமாக செய்யுங்கள், சிறப்பாக செய்யுங்கள் என்று வாழ்த்தினார்.

நான் பயணித்துக் கொண்டிருக்கும் தொல்லியல் கழகத்திலும் இது குறித்து பேசிய பொழுது அண்ணே செஞ்சிடுவோம் என்றான் மணி.

பசுமை பட்டாளம் இளைஞர் படை விதைக்கலாமில் இது குறித்து பேசிய பொழுது மலைப்பனுக்கு மூக்கு மேல் கோபம் நீங்கள் எது செய்தாலும் உங்களோடு இருப்போம் என்று உங்களுக்கு தெரியாதா என்று கேள்வி வேறு.

இத்தனை ஆதரவுக்கு பின்னரும் நிகழ்வை துவங்குவதில் தாமதப்படுத்தக் கூடாது என்பதால் மார்ச் 1 அன்று விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டோம்.

நூலின் எழுத்தாளர் தோழர் கண்ணம்மாள் அன்றைய தினம் சென்னையிலிருந்ததால் சாத்தியப்படவில்லை.

அடுத்ததாக ஆர்கே குறித்து மிக நன்றாக பேசக்கூடிய முனைவர் ராஜ்குமார் அவர்களை தொடர்பு கொண்ட பொழுது அவர் 16ம் தேதி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

எதிர்வரும் 23 /3 /2025 விதைக்கலாம் தன்னுடைய 500 வது நிகழ்வை தொடுகிறது. இந்த விழா ஏற்பாடுகளில் விதைக்கலாமியர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். அடியேனும்தான். எனவே நிகழ்வைத் தள்ளி வைப்பதும் இயலாத காரியம்.

களப் போராளி கவிஞர் தோழர் கவிவர்மன்  அவர்களை நிகழ்வுக்கு அழைத்த பொழுது வந்துவிடுகிறேன் தோழர் என்று பெரும் ஆதரவைத் தந்தார்.

ஆக 16/3/25ஆம் தேதி நிகழ்வு என்று முடிவாகிவிட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள தவறிவிட்டேன்.

மிக நல்ல முகூர்த்த நாள்.

புதுக்கோட்டையின் மாபெரும் ஆளுமை ஒருவர் குறித்த நிகழ்வு ஒன்றை முன்னெடுக்கும் பொழுது அரங்கத்தில் ஆட்கள் இல்லாவிட்டால் பெரும் சங்கடமாக போய்விடுமே என்று வருத்தமாக இருந்தது.

இருப்பினும் விதைக்கலாம் நண்பர்களும் / வீதி நண்பர்களும் நிச்சயம் வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் விழாவைத் தேதி மாற்றாமல் அதே தேதியில் அறிவித்துவிட்டோம்.

முதல் நாள் இரவே பெருங்குடி பாலாஜி அரங்கைத் தயார் செய்து விட்டார், மறுநாள் சமர்த்தாக 9 மணிக்கெல்லாம் எங்கள் குழு அரங்கிற்கு வந்துவிட்டது.

ஒரு அரை மணி நேரத்திற்கு திக் திக் என்றுதான் இருந்தது.

நிகழ்வு துவங்கியதற்கு பிறகு எதிர்பாராத வண்ணம் அரங்கு நிறைந்துவிட்டது.

நிறைமதி தனது முதல் தொகுப்புரையை இந்த நிகழ்வில் துவங்கினர்.

முதற்கண் ஆர்கே தோழர் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து நிகழ்வு தொடங்கியது.

தாய்த்தமிழ் பள்ளி இராசா அவர்கள் மிக அற்புதமாக நூல் குறித்த வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நூலில் இருக்கும் நுட்பமான தரவுகளை தனக்கே உரிய பாணியில் இயல்பு தமிழில் விவரித்துச் சொன்னார் தோழர் இராசா.

இந்த நிகழ்வில் பங்கு பெற திருச்சி மாநகரத்திலிருந்து பயணித்து அரங்கத்திற்கு வந்திருந்த தோழர் மாணிக்கத்தாய் அவர்கள் மிக அற்புதமான உரையை தந்தார்கள்.

என்னுடைய வரவேற்புரையில் ஏற்கனவே உச்சியில் இருக்கும் ஆர்கேவிற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் கேட்டதைக் குறிப்பிட்டு இருந்தேன்.

மிக நேர்த்தியாக இதை தன்னுடைய உரையில் பயன்படுத்திக் கொண்டார் தோழர் மாணிக்கத்தாய்.  ஆர்கே என்றுமே உச்சியில் இருப்பவர் கவிஞர் தங்கமூர்த்தி சொன்னது போல என்றார். அப்போது அரங்கில் தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி இல்லை!

தோழர் மாணிக்கத்தாய் இவ்வளவு அற்புதமாக பேசுவார் என்பதை இந்த தளத்தில்தான் நேரடியாக நான் பார்த்தேன்.

நூறு கிலோ மீட்டர்கள் பயணித்து இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டது மகிழ்வுக்குரியது என்பதை நன்றியோடு குறிப்பிட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து முனைவர் ராஜ்குமார் அவர்கள் தனக்கே உரிய தனித்துவமான ஆளுமைப் பண்போடு தோழர் ஆர்.கே குறித்த அற்புத உரை ஒன்றை தந்தார். மிக குறிப்பாக ஆர்கே தோழரைக் கடந்து கண்ணம்மாள் தோழர் குறித்த பல செய்திகளை அவர் பகிர்ந்து கொண்டார். 

தோழர் ராஜ்குமார் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மேடையில் இருக்கும் அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்தார்கள், அவையில் அண்ணன் தங்கமூர்த்தி!

அரங்கிற்கு வருகை தந்து மிக அற்புதமான உரை ஒன்றை தந்தார். எந்த மேடையைக் கொடுத்தாலும் அந்த மேடையை தன் சொந்த மேடையாக்கி கொண்டு மூன்று வரிக்கு ஒரு முறை கைதட்டல் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அண்ணன்.  இப்படி நுணுக்கமாக பேசுவதால்தான் மேடைகள் அவருக்காக காத்திருக்கின்றன.  

தமிழ்ச் செம்மல் அவர்களின் உரைக்கு பின்னர் கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பேசினார்.  

தரவுகளை கதையாக மாற்றி அற்புதமாக பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் தோழர் ஆர்கே நூலைப் பதிப்பித்தற்காக தோழர் கவிவர்மன் அவர்களுக்கு மலர்த்தரு நூற்களம் 2025 விருது வழங்கப்பட்டது.

நூலைத் தரவுகளோடு ஆக்கித் தந்ததற்காக எழுத்தாளர் தோழர் கண்ணம்மாள் அவர்களுக்கு மலர்த்தரு செங்கோல் விருது 2025 வழங்கப்பட்டது.

இந்த இரண்டு விருதுகளையும் புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் தமிழ் கவிஞர் தங்க மூர்த்தி அவர்கள் தன்னுடைய போர்க்கரத்தால் வழங்கித் தந்தார்: இதற்காக மலர்ந்தரு அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

தோழர் கவிவர்மன் தன்னை பக்குவப்படுத்தி சரியான பாதைக்கு அழைத்து வந்து இன்று உயிரோடு இருப்பதற்கு காரணமானவர் ஆர்கே தோழர் என்று நெகிழ்வாக குறிப்பிட்டார். 

தோழர் கண்ணம்மாள் அவர்களது ஏற்புரையில் ஆர்கே தோழர் குறித்து அவர் எழுதாத சில விஷயங்களை அவையில் பகிர்ந்து கொண்டார்.


உரைவீச்சை தந்தமைக்காக முனைவர் ராஜ்குமார், தாய்த்தமிழ் ராசா, மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன..

அக்கு சிகிச்சையாளர் நடராஜன் நன்றி கூறி அடுத்த மலர்த்தரு காகிதக் கொக்கு நிகழ்விற்கு அனைவரையும் அழைத்தார்.

பங்கேற்பாளர்கள்
தோழர் ஆர் கே குடும்பத்தினர்.
பொறியாளர் தீபக்
மருத்துவர் பிரகாஷ்
தோழர் ஆர் கே யின் சகோதரர் பூவண்ணன் இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வுக்கு முதல் ஆளாக எல்ஐசி யில் இருந்து அலுவலர் ராணி வருகை தந்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளி காவிரி நகர் முதுகலை ஆசிரியர் பழனிக்குமார் அவர்கள், தொடர்ந்து கும திருப்பதி அவர்கள், வீதி ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரி கவிஞர் கீதா. முனைவர் ராஜ்குமார், இயங்கு இயக்கு என்பதை தாரக மந்திரமாக வைத்திருக்கும் அன்பு அண்ணன் நிலவன், ஆர் கே உயிரோடு இருந்த பொழுது அவரோடு பயணித்தோம் ஆனால் இந்த நிகழ்வில் இருக்க முடியாதது எனக்கு வருத்தம் என்று தெரிவித்த மரியாதைக்குரிய தோழர் எல் ஐ சி அசோகன். சிறார் எழுத்தாளர் பாஸ்கர் கோபால், இதயம் முரளி, அன்புத் தோழர் டைபி நாராயணன், தமுஎ  க ச புதுக்கோட்டையின் மாவட்டச் செயலாளர் கவிஞர் ஸ்டாலின் சரவணன், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் ஒட்டடை பாலச்சந்திரன், மங்கை ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திரு பாபு ராஜேந்திரன், தோழர் எம் ஏ ரகுமான், மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு அவர்கள், தோழர் விமான வள்ளல் அவர்கள், தோழர் சுமதி. தோழர் அமுது ராணி சிவா, தோழர் கிரிஜா, தோழர் புவனேஸ்வரி, டைபி  சோலையப்பன், நல்லாசிரியர் மாரியப்பன், தோழர் முகமது கனி தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் முருகேசன், கற்பி இயக்கத்தின் நிறுவனர் துவாரகா சாமிநாதன், விதைக்கலாம் பாலாஜி தட்சிணாமூர்த்தி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்து என்னை நெகழ்ச்சிக்கு ஆளாக்கினார்கள்.

தனி ஆளாக ந் தன் தங்கைக்கு பேறுகால பணியில் ஈடுபட்டிருக்கும் கவிஞர் ரேவதி அவர்கள் மரியாதை நிமித்தம் வந்து போனது மகிழ்வு.

நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு தோழரின் மகன் தீபக் கருப்பையா என்னை சந்தித்தார், நான் வகுப்பறையில் சொன்ன வாக்கியங்கள் சிலவற்றை தந்தையோடு பேசிக் கொண்டிருந்ததே நினைவுகூர்ந்தார்.  நான் அப்படியெல்லாம் பேசி இருக்கிறேன் என்பதே இப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  துவக்கத்திலிருந்தே ஒரே புள்ளியில்தான் பயணித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.

நிகழ்வின் இன்னொரு மகிழ்வாக நிகழ்வுச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று தோழர் கண்ணம்மாள் ஒரு தொகையை எனக்கு வழங்கினார், அதை நான் மறுத்தேன், அருகே இருந்த நிறைமதி நீங்க கொடுத்தா நாங்க ஜீபே பண்ணுவோம் என்று சொன்னதும் பணம் கொடுக்கும் முடிவைக் கைவிட்டார் தோழர் கண்ணம்மாள் !

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த சமூக மேம்பாட்டிற்காக கொடுத்த ஒருவருக்கு ஒரு சிறு விழாவை எடுப்பதற்கு கூட பணம் பெற வேண்டுமா என்ன?

நிறை அப்படிக் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

1999 இல் தீபக் என் வீட்டிற்கு வந்திருந்த பொழுது தன் தந்தையார் மறைவு குறித்து என்னிடம் பேசினார். அந்த உரையாடலில் மூன்று முறை என்னிடம் கேட்டார் எங்கப்பாவைத் தெரியாதா ? இல்லை என்று சொல்லிவிட்டேன்.

2025 இல் தோழர் ஆர் கே அவர்களின் வாழ்வு ஆவணப்படுத்தப்பட்டதற்கு பிறகு அந்த நூலை படிக்கும் பொழுது எழுந்த பெரும் குற்ற உணர்வு தான் இன்றைய நிகழ்வாக மலர்ந்தது.

ஆர்கே ஒரு மாபெரும் ஆளுமை, மிகச் சிறந்த மானுடனாக அவர் இருந்ததால்தான் இன்றும் அவர் கொண்டாடப்படுகிறார்.

காகிதக் கொக்குகள் இனி பறக்கும் ....

தொடர்வோம்
அன்பன்
மது

Comments