தில்லி தமிழ்ச்சங்கம் R. ஷாஜகான் அவர்களின் பதிவு
மார்ச் 2ஆம் தேதி எழுதிய பதிவில், <<கணவர் இல்லாத ஒரு பெண்ணுக்கு, தசைச் சிதைவு நோய் பாதித்த பையன் இருக்கிறான். உக்கடம் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண்ணுக்கு வாழ்வாதாரத்துக்காக உதவி செய்ய முடியுமா என்று கேட்டார் ஒரு நண்பர். இருவருமாகச் சென்று அவரை சந்தித்தோம். உதவி செய்வதாக வாக்களித்துவிட்டு வந்தேன். >> என்று எழுதியிருந்தேன்.
மாலை வேளையில் தள்ளுவண்டியில் இட்லிக்கடை போடலாம் என்பதுதான் அன்று நாங்கள் பேசியது. தள்ளு வண்டி பார்த்துவிட்டு போன் செய்யுங்கள், ஏற்பாடு செய்கிறேன் என்றேன்.
அதன் பிறகு, அந்தப் பெண் ஒரு நாள் போன் செய்தார். செல்வபுரத்தில் ஒரு தள்ளுவண்டி பார்த்திருக்கிறேன். 16 ஆயிரம் சொல்கிறார்கள் என்றார். தள்ளுவண்டிக்காரரிடம் போய், அங்கிருந்து போன் செய்யுங்கள் என்றேன். போன் செய்தார். வணடிக்காரரிடம் பேசினேன்.
- என் சம்சாரத்துக்காக வாங்கினது. 16 ஆயிரத்துக்குத்தான் வாங்கினேன். நாலு மாசம்கூட ஆகலே. அவளுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அதனால குடுக்கறேன் என்றார்.
- 12 ஆயிரம்தான். ஓகேன்னா சொல்லுங்க. இதோ இப்பவே பணம் போடறேன் என்று அடித்துப்பேச, பிள்ளையிடம் கலந்து கொண்டு வருகிறேன் என்றவர், சற்று நேரத்தில் வந்து 14 ஆயிரம்னா ஓகே என்றார்.
- அதெல்லாம் முடியாது. 12தான். இல்லேன்னா விடுங்க. வேற வண்டி பாத்துக்கறேன் என்று சீன் போட, சரி என்று சொல்லி விட்டார்.
அதே நிமிடம் அவருக்குப் பணத்தை அனுப்பி விட்டேன்.
அடுத்து, பாத்திரங்கள் வேண்டும் என்றார். கடைக்குப் போய் பாத்திரங்களை எல்லாம் தேர்வு செய்துகொண்டு, லிஸ்ட்போட்டு விலையைக் காட்டுங்க என்றேன். அதேபோல ஒரு பாத்திரக்கடைக்குச் சென்று அங்கிருந்து பட்டியல் அனுப்பினார்.
இட்லி குண்டான், சட்னி சாம்பார் பாத்திரங்கள், ஹாட்பேக் டப்பாக்கள், ஸ்டவ், கரண்டிகள் எல்லாம் சேர்த்து 6150 ரூபாய் காட்டியது. கடைக்காரரிடம் பேசி, 6000 ரூபாய் இறுதி செய்து உடனே அனுப்பி விட்டேன்.
"தள்ளுவண்டியில் பக்கப் பலகைகள் இல்லை. அடுப்பு எரியும்போது காத்தடிக்கும், மண்ணடிக்கும். அதனால ஒரு கார்பென்டரைப் புடிச்சு மூணு பக்கம் ஒரு அடிப் பலகை அடிங்க. என்ன செலவாகும்னு சொல்லுங்க. அனுப்பிடறேன். பாத்திரங்களை ஒரு படம் எடுத்து அனுப்புங்க" என்று சொல்லியிருந்தேன்.
ஆயிற்றா...
இது நடந்து இருபது நாட்கள் ஆகிவிட்டது. போனும் வரவில்லை. பாத்திரங்களின் படமும் வரவில்லை. போன் செய்தால் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. (என்னிடம் இருந்தது மறைந்த கணவரின் எண்)
என்னவாயிற்று பாருங்கள் என்று அவரைப் பரிந்துரை செய்த நண்பருக்கு போன் செய்தேன். அவரும் போன் செய்து பார்த்தேன், கிடைக்கவில்லை என்றார்.
ஏற்கெனவே நிறைய அனுபவங்கள் உள்ளதால் கொஞ்சம் கடுப்பாக இருந்தது.
செவ்வாய்க் கிழமை கோவை விமானநிலையம் வரை செல்லும் வேலை வந்தது. திரும்பும் வழியில் அந்தப் பெண் வசிக்கும் பகுதியை அடைந்தேன். அவருடைய வீட்டு எண்ணோ, முகவரியோ தெரியாது. பெயரும், மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறான் என்பது மட்டுமே தெரியும்.
மாலை நேரம் பல தள்ளுவண்டிக் கடைகள் இருந்தன. ஒருவரிடம் கேட்டதும், உத்தேசமாக அவர் வசிப்பிடத்தைச் சொன்னார். அந்த இடத்தை நெருங்கிய பிறகு இன்னொரு கடைக்காரப் பெண்ணிடம் கேட்க, அவருக்கு அந்தப் பெண்ணின் முழு விவரமும் தெரிந்திருந்தது. கச்சிதமாக வீட்டு அடையாளம் சொன்னார்.
(- ஏனுங்க நீங்க டாக்டரா என்றார் அந்தப் பெண்.
- இல்லியே... ஏன் கேக்கறீங்க?
- இல்லே... அந்தப் பையனுக்கு எதுனா டிரீட்மென்ட் எல்ப் பண்ண வந்தீங்களோன்னு கேட்டேன்)
ஏம்மா... வண்டி வாங்கிக் குடுத்து எத்தனை நாளாச்சு. பலகை அடிச்சீங்களா கடை போடறீங்களா ஒண்ணுமே சொல்லலே. பாத்திரம் வாங்கினப்புறம் போட்டோ எடுத்து அனுப்புங்கன்னு சொன்னேன். அதுவும் செய்யலே... வேற எதும் வேணும்னா சொல்லுங்கன்னும் சொன்னேன். ஒரு போன்கூடப் பண்ணலே... இப்படித்தான் செய்வீங்களா என்றெல்லாம் கேட்பதற்கு மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே அவருடைய வீடு இருந்த ப்ளாக்கின் அருகே போனபோது
ஒரு வளரிளம்பெண் மூன்றுசக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிப் பையனை வைத்துக் கொண்டும், ஒரு தள்ளுவண்டியில் பாத்திரங்கள், தண்ணீர் குடங்கள், பக்கெட்டு, இட்லிக்குண்டான், ஸ்டவ், கேஸ் சிலிண்டர், உள்பட எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணும் தள்ளிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார்கள்.
ஒத்திகை பார்த்த சொற்களுக்கெல்லாம் வேலையே இல்லாமல் போனது.
- என்னம்மா... கடை போட்டாச்சா?
- ஆமா சார். பதினஞ்சு நாளா போடறேன்.
- ஏம்மா ஒரு போன் செய்யக்கூடாதா... எவ்ளோ சொன்னேன்
- இல்ல சார். இவனுக்கு நடுவுல உடம்பு சரியில்லாமப் போச்சு.
- ஒரு நிமிசம் போன் செஞ்சு இப்படியிப்படி சமாச்சாரம்னுசொல்லக்கூடவா நேரமில்லே?
- ...................
- சரி விடுங்க. எங்கே கடை போடறீங்க?
- அன்னிக்கி பாத்தோமில்லே. அதே இடத்துல கொஞ்சம் தள்ளி சார்.
- ஆமா... இது நாம வாங்கின வண்டி இல்லையே?
- இல்ல சார். அந்த வண்டி ரொம்ப ஹெவியா இருக்கு. தள்ள முடியலே. அதனால, நாள் வாடகைக்கு இந்த வண்டி வாங்கியிருக்கேன். இதுல வச்சு தள்ளிகிட்டுப் போய் அந்த வண்டியில சாமான்லாம் எடுத்து வச்சுக்குவேன்.
- சரி. நடங்க போகலாம்.
வீட்டிலிருந்து சுமார் இரண்டு பர்லாங் தூரமாவது இருக்கும். குண்டும் குழியுமான சாலைகளில் பாத்திரங்கள் உருண்டுவிடாதபடி சாதுர்யமாகத் தள்ள வேண்டும். கற்களிலும் மேடுகுழிகளிலும் ஏற்றிவிடாதபடி பையனையும் சூதானமாக ச்ககர நாற்காலியில் தள்ளிக் கொண்டு போக வேண்டும்.
வேலியோரமாக சங்கிலி போட்டுப் பூட்டப்பட்டிருந்த தள்ளுவண்டியின் இரண்டு பக்கமும் பிடித்துத் தூக்கி இரண்டு அடி தள்ளி நிறுத்தினார்கள். தள்ளிக் கொண்டு வந்த வண்டியை அதன் அருகே நிறுத்தினார்கள். அதில் இருந்த பொருட்களை எல்லாம் இந்த வண்டிக்கு மாற்றினார்கள்.
கை கழுவுவதற்கான தண்ணீர் பக்கெட், டம்ளர் வேலி ஓரமாக வைக்கப்பட்டது. பையன் இருந்த சக்கர நாற்காலி மற்றொரு ஓரம் நிறுத்தப்பட்டது. குடிப்பதற்கான தண்ணீர்க் குடமும் டம்ளர்களும் வண்டியில் முன்பக்கம் வைக்கப்பட்டன.
ஸ்டவ்வை வண்டியில் ஓரமாக வைத்து, அதன் மூன்று பக்கமும் மூடும்படி ஓர் அட்டைப்பெட்டி மடித்து நிறுத்தப்பட்டது. பேட்டரியில் இணைக்கப்பட்டிருந்த எல்ஈடி பல்ப் தொங்கவிடப்பட்டது. இப்போது அது கடையாகத் தயாராகி விட்டது.
- ஏம்மா... இதுக்குத்தானே கார்பென்டரைப் புடிச்சு பலகை அடிங்கன்னு சொன்னேன்? என்ன செலவானாலும் தர்றேன்னு சொன்னேன்ல...?
- இல்ல சார்....
- என்னம்மா இல்ல சார்... நொல்ல சார்னுட்டு
- அது சார்... அடிக்கடி போன் செஞ்சு காசு கேட்டா தொந்தரவா நினைச்சுடுவீங்களோன்னுதான்...
ஹய்யோ என்றானது எனக்கு. சட்டெனத் துளிர்த்த கண்ணீரை அடக்குவது கடினமாக இருந்தது.
சரி எல்லாம் எடுத்து வைங்க. கார் அந்தப்பக்கம் நிக்குது. எடுத்துட்டு வர்றேன் என்று அங்கிருந்து விலகி, சமாளித்துக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு மறுபடி போனேன்.
- நீ என்னம்மா படிக்கிறே
- பத்தாவது சார்
- நல்லாப் படிப்பியா
- கிளாஸ் பர்ஸ்ட் சார்
- என்னம்மா நெசமாவா?
- ஆமா சார். எல்லாத்திலும் 90க்கு மேலே எடுப்பா
- அப்படியா.... வெரிகுட்.
- இப்ப மணி ஏழரை ஆயிடுச்சு. எந்நேரம் வரைக்கும் கடை போடுவீங்க.
- பதினொன்னு பதினொன்றரை வரை போடுவோம் சார்.
- அப்ப வீடு போக 12 ஆகிடும்ல?
- ஆமா சார்.
- அப்புறம் நீ எப்ப படிப்பே?
- போன்ல வச்சிருக்கேன் சார். ஆள் அதிகம் வராத நேரத்துல அம்மா மட்டுமே சமாளிப்பாங்க. அப்ப அங்கே உக்காந்து போன்ல படிச்சுக்குவேன்.
அங்கே என்றது, தள்ளிக் கொண்டு வந்த வண்டியின் பின்புறம். மறுபடி கண்ணீர் துளிர்த்தது.
ஓகே. நல்லாப்படி. ஸ்கூல் முடிச்சப்புறம் காலேஜ்க்குப் போகணும்னா கவலைப்படாதே. நான் இருந்தேன்னா நிச்சயம் உதவி செய்வேன். ஓகேவா....
சார் இட்லி சாப்பிடுங்க சார் என்றார் அந்தப் பெண். ரெண்டே ரெண்டு வைங்க என்றேன். இரண்டையும் தின்பதற்குள் அந்த மாணவி ஒரு தோசையும் ஊற்றி விட்டார். சட்னி சாம்பார் மோசமில்லை. காரச் சட்னி நன்றாகவே இருந்தது.
இருநூறு ரூபாயைக் கொடுத்தேன்.
அதெல்லாம் வேணாம் சார்...
சும்மா இருங்க. முதல் போணி. வாங்கிப் போடுங்க.
- வேறென்ன வேணும் உங்களுக்கு.
- சாப்பிட வர்றவங்க உக்கார்றதுக்கு சேர் இல்லை சார்.
- சரி. பார்ப்போம். ஏற்பாடு செய்யலாம். ஓஎல்எக்ஸ்ல பாக்கறேன். வேற என்ன வேணும்னாலும் போன் செய்ங்க.
புதிய நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
நேற்று போன் செய்தார். மளிகை சில்லறையா வாங்குனா விலை அதிகமா இருக்கு. ஹோல்சேல் கடையில் வாங்கினா குறையும் என்றார். இப்போதைக்கு இதை வைங்க என்று சொல்லி 2000 அனுப்பி வைத்தேன்.
காரில் திரும்பி வரும்போது என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தேன்.
- நான் வாங்கிக் கொடுத்த தள்ளுவண்டியில் டயர் தேய்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தள்ள முடியவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.
- கார்பென்டரை வைத்து மூன்று பக்கமும் தடுப்புக் கட்டை அடிக்க வேண்டும்.
- அதைத் தள்ள முடியாமல் போனதால்தான் தள்ளிக்கொண்டு வருகிற வண்டிக்கு நாள் வாடகை 50 ரூபாய் போகிறது.
- பேட்டரி-எல்ஈடி லைட்டுக்கு நாள் வாடகை 30 ரூபாய். பேட்டரி வாங்குவது பெரிய விஷயமில்லை. ஆனால் சார்ஜ் போட வேண்டும். அதைவிட, சார்ஜ் போடும் வகையில் சோலார் பேட்டரி செட் ஒன்று வாங்கிக் கொடுக்கலாம்.
- நாற்காலிகள் என்றால் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருவதும் சிரமம். ஆறு ஸ்டூல்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இரவு 12 மணி வரை இட்லிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, காலையில் இரண்டு பஸ்கள் மாறி அரசுப் பள்ளிக்குச் சென்று படித்து, மாலையில் வந்தபிறகு சட்னி சாம்பார் இட்லி ஊற்றும் வேலைகள் செய்து - இத்தனைக்கும் இடையில் 90க்கு மேல் மார்க் வாங்குகிற பிள்ளைக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவுவது?
இப்போதுதான் ப்ளஸ் 1 போகப்போகிறாள். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்தே கல்லூரி.
என்னைப் போன்ற தனிநபரை நம்பியிராமல், தொடர் உதவி கிடைக்கும் வகையில் ஏதேனுமொரு என்ஜிஓவைப் பிடித்து அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து, உதவி வாங்கித் தர வேண்டும். அப்படிக் கிடைத்து விட்டால், கல்லூரிப் படிப்பு எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் அது முடியும் வரையிலும் நிதியுதவி கிடைக்கும்.
ஏற்கெனவே இரண்டு மாணவிகளுக்கு இவ்வாறு உதவி பெற்றுத் தந்த பெங்களூர் நண்பருக்குத் தொலைபேசினேன். அவரும் விசாரித்தார். இந்த ஆண்டுக்கான நிதியுதவிக்குத் தேர்வு செய்யும் பணி ஜனவரியிலேயே முடிந்து விட்டது. அடுத்த ஆண்டுக்கு இந்த ஜூலையில் ஆரம்பமாகும். அப்போது முயற்சி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்.
ஜூனிலிருந்தே நினைவுபடுத்த வேண்டும். எப்படியாவது அந்த நிரந்தர உதவி பெற்றுவிட வேண்டும். .....
Comments
Post a Comment
வருக வருக